பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தும் அரசு - பாமக கண்டனம்!
பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி பொதுமக்களிடன் அரசு கொள்ளையடிப்பது கண்டனத்திற்கு உரியது என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி பொதுமக்களிடன் அரசு கொள்ளையடிப்பது கண்டனத்திற்கு உரியது என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளின் சட்டவிரோதக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டிய அரசே சட்டவிரோதமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்த கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 40 கி.மீ முதல் 150 கி.மீ வரை இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் 50% பேருந்துகள் விரைவுப் பேருந்துகள் என மாற்றம் செய்யப்பட்டு அவற்றில் 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், 150 கி.மீ தொலைவுக்கும் கூடுதலாக இயக்கப்படும் சாதாரண பேருந்துகள் டீலக்ஸ் பேருந்துகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 20% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பேருந்துகளில் இதுவரை ரூ.152 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 15%, அதாவது ரூ.23 உயர்த்தப்பட்டு, ரூ.175 வசூலிக்கப் படுகிறது. திருவண்ணாமலை - விழுப்புரம், திருவண்ணாமலை-சேலம், திருப்பதி - திருவண்ணாமலை, காஞ்சிபுரம்- திருவண்ணாமலை மார்க்கங்களிலும் 15% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வேலூரிலிருந்து திருவண்ணாமலை வரையிலான கட்டணம் 20% அதாவது 72 ரூபாயிலிருந்து ரூ.86ஆக உயர்ந்துள்ளது. நகரப் பேருந்துகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் எல்.எஸ்.எஸ் (LSS) வகை பேருந்துகளாக அறிவிக்கப்பட்டு, ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் தான் 100% வரை பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால், கட்டண உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் அதிகரிக்கவில்லை. மாறாக குறைந்து விட்டது. காரணம், உயர்த்தப்பட்டக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்ததால், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து வந்த பலரும் தொடர்வண்டி, தானி, வேன்களுக்கு மாறிவிட்டது தான். இப்போதும் கட்டணம் உயர்த்தப்பட்ட மார்க்கங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் வருவாய் அதிகரிப்பதற்கு பதில் குறையத் தான் போகிறது. தனியார் பேருந்துகளில் ஏராளமான வசதிகளுடன் குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பேருந்துகளை டீலக்ஸ் பேருந்தாக அறிவித்து கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதை நம்பி தங்களின் பணத்தைக் கொட்டி பயணம் செய்து ஏமாறுவதற்கு தமிழக மக்கள் தயாராக இல்லை.
டீசல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன என்பது உண்மை தான். இந்த நெருக்கடியை சமாளித்து போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்குவதில் தான் ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறன் வெளிப்படும். அதற்கு மாறாக, டீசல் கட்டணம் உயரும் போதும், போக்குவரத்துக் கழகங்கள் இழப்பை சந்திக்கும் போதும் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவதென்பது நிர்வாகத் திறன் அல்ல. மாறாக எந்தத் தொலைநோக்கும் இல்லாமல் செலவுக்கு ஏற்றவாறு வரவை அதிகரிக்க கட்டணத்தை உயர்த்துவதென்பது வரவு&செலவு கணக்கில் மட்டும் கவனம் செலுத்தும் மேஸ்திரியின் செயலுக்கு இணையானதாகும். இது நல்லதல்ல.
தமிழ்நாட்டில் பல இடங்களில் அரசுப் பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சாதாரணக் கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தையே தனியார் பேருந்துகள் வசூலிக்கின்றன. இதன் மூலம் அதிக பயணிகளை ஈர்த்து அதிக வருவாயையும், கூடுதல் லாபத்தையும் ஈட்டுகின்றன. அதேநேரத்தில் அரசுப் பேருந்துகள் மழை பெய்தால் ஒழுகுபவையாகவும், காற்றடித்தால் மேற்கூரை பறந்து செல்லுபவையாகவும் இருப்பதால் அதில் பயணம் செய்யவே மக்கள் தயங்குகின்றனர். இத்தகைய சூழலில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ள சட்டவிரோத கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதிலிருந்து விலக்கியே வைக்கும். இது போக்குவரத்துக் கழகங்களின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும்.
கடந்த ஜனவரி மாதத்தில் பேருந்துக் கட்டணங்கள் அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டதால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மக்களில் 30 விழுக்காட்டினர் வேறு வகையான போக்குவரத்துகளுக்கு மாறினர் என்பது அரசுக்கு கற்பிக்கப்பட்ட பாடம் ஆகும். இதை உணர்ந்து, கடந்த காலங்களில் விலகிச் சென்ற பயணிகளை மீண்டும் அரசுப் பேருந்துகளுக்கு அழைத்து வருவது மட்டுமே அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வலிமைப்படுத்தும்; மாறாக, சட்டவிரோத கட்டண உயர்வுகள் அவற்றை சிதைத்து விடும். எனவே, அரசுப் பேருந்துகளின் வகைப்பாட்டை மாற்றி உயர்த்தப்பட்ட கட்டணங்களை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அரசுப் பேருந்துகளில் காணப்படும் குறைகளை களைந்து, மக்கள் ஆதாரவை மீண்டும் பெற்று போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்