சத்துணவு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


"காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் அறப்போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.  அவர்களின் கோரிக்கைகளை குறித்து அவர்களுடன் பேச்சு நடத்த அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.


சத்துணவுப் பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; பணிக்கொடையை உயர்த்தி வழங்க வேண்டும்; குழந்தைகளுக்கான சத்துணவூட்டு செலவை ரூ.5 என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற 5 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துணவுப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இவற்றில் நான்கு கோரிக்கைகள் சத்துணவுப் பணியாளர்கள் நலன் சார்ந்தவை. ஒரு கோரிக்கை மாணவர்கள் நலன் சார்ந்ததாகும். இக்கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை என்பதால் அவற்றை ஏற்பதே சரியாகும். 


கடந்த பல ஆண்டுகளாக இத்தகையக் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தவறான வாக்குறுதிகளை அளித்தும், காவல்துறை மூலம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டும் தான் போராட்டத்தை தமிழக அரசு அடக்குகிறதே தவிர, சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது.


தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் 35 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது பணியமர்த்தப்பட்டவர்களில் பலர் பணி ஓய்வு பெற்றுச் சென்று விட்டனர். ஆனால், அப்போது அவர்களால் முன்வைக்கப்பட்ட முழுநேர பணி நியமனம், காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இன்றளவும் கோரிக்கைகளாகவே உள்ளன. தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து வரும் இரு திராவிடக் கட்சிகளும் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.


இதே கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மீது காவல்துறையினரை ஏவி விட்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது அப்போதைய தி.மு.க அரசு. அப்போது,‘‘ எம்.ஜி.ஆர் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் என்பதால் தான் சத்துணவுப் பணியாளர்களை தி.மு.க. அரசு பழிவாங்குகிறது. அ.தி.மு.க ஆட்சி மீண்டும் இவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சத்துணவுப் பணியாளர்களின் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றவில்லை. மாறாக, ஜெயலலிதா வழிகாட்டுதலில் நடந்த ஓ.பி.எஸ் ஆட்சியின் போது 17.04.2015 அன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர்கள் மீது கொடூரமான முறையில் தடியடி நடத்தப்பட்டது. அதன்பின் 3 ஆண்டுகளாகியும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு முன்வரவில்லை.


சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற முடியாத கடினமாக கோரிக்கைகள் அல்ல. மிகவும் சாதாரணமான கோரிக்கைகள் தான். அதுமட்டுமின்றி, இந்தக் கோரிக்கைகள் அனைத்தும்  சத்துணவுப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்டவை என்பதால் அவற்றை நிறைவேற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதை செய்யத் தவறுவது மிகப்பெரிய துரோகமாகும்.


எனவே, சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து அவர்களை தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்!