சென்னையில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் இன்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து மாநகராட்சி நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 43,051 முகாம்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. 


இதற்காக 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. வழி பயண மையங்கள் ஆயிரத்து 652 என்ற எண்ணிக்கையில் நிறுவப்பட்டு, சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


வெளி மாநிலங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் நடமாடும் ஊர்திகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.   எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், எந்தவிதமான நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அதனைக் கருத்தில் கொள்ளாமல், தவறாமல் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி, ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அந்தந்த மாநகராட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.