மாற்றுத்திறனாளிக்கு நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னுரிமை!
இன்று (28.01.2020) சென்னை, கீழ்ப்பாக்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக கூட்டரங்கில், நெல் கொள்முதல், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த மண்டல மேலாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இன்று (28.01.2020) சென்னை, கீழ்ப்பாக்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக கூட்டரங்கில், நெல் கொள்முதல், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த மண்டல மேலாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம், உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
E-Procurement கொள்முதல் திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் பணிகள் கணினிமயமாக்கப்பட்டு, நெல்லுக்குரிய தொகை ECS மூலம் வழங்கப்படுகிறது. நடப்பு பருவத்தில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகை சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.70/-ம், சாதா ரக நெல்லுக்கு ரூ.50/-ம் சேர்த்து, நெல் கொள்முதல் விலையாக சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.1,905 என்றும், சாதா ரகம் ரூ.1,865 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்டா மாவட்டங்களில் 1,141 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், மற்ற மாவட்டங்களில் 151 கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு, மொத்தம் 1,292 கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இன்று வரை 1 இலட்சத்து 58ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 27,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை 10 கோடியே 20 இலட்சம் ரூபாயும் சேர்த்து, கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசு 721 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளது.
டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் தேவையான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும், நெல் கொண்டுவரும் விவசாயிகள் மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டால் அவர்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் நாட்டின் பொது விநியோகத் திட்டத்திற்கு நான்கு மாத தேவைக்கான சுமார் 13 இலட்சம் மெ.டன் தரமான புழுங்கல் மற்றும் பச்சரிசியும், கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியனவும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும், மாதம் முழுவதும், தொடர்ந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கிடங்குகளில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு அனுப்பப்படும் பொருள்கள் உரிய தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் அலுவலர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பொது விநியோகத் திட்ட கிடங்குகளிலிருந்து, நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்படும் லாரிகள், மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே, செல்வதை மண்டல மேலாளர்கள் தங்களது ஆய்வின் போது உறுதி செய்ய வேண்டும். பொது விநியோகத்திட்ட லாரிகளில் ழுஞளு கருவிகள் பொருத்துதல் மற்றும் கிடங்குகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் ஆகிய பணிகளை தலைமை அலுவலக வழிகாட்டுதலின்படி துல்லியமாக கடைபிடிக்க வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் சேமிப்பு கட்டமைப்பு வசதிகள் 13 இலட்சம் மெ.டன்னிலிருந்து, 22 இலட்சம் மெ.டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. நியாய விலை அங்காடிகள் நெல் கொள்முதல் நிலையங்கள், நெல் உலர் களங்கள், நவீன நெல் சேமிப்பு கலன்கள் ஆகியவற்றிற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 8 ஆண்டுகளில் 1,450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அரசு நவீன அரிசி ஆலைகளை மேம்படுத்தி, பொது விநியோகத் திட்ட தேவைக்கான அரிசியை உயர் தரத்துடன் தயார் செய்யும் பொருட்டு 94 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் 21 அரசு அரிசி ஆலைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உணவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் திருமதி. ஆ. சுதாதேவி, இ.ஆ.ப., உணவு பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் திரு. பிரதீப் வி. பிலிப், இ.கா.ப., மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.