சரியும் பொருளாதாரம்: வேலைவாய்ப்புகளை காக்க ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், 7-ஆவது பொருளாதார வல்லரசாகவும் திகழும் இந்தியா கடுமையான  பொருளாதார பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக விற்பனை சரிவு, வேலைவாய்ப்பு இழப்பு போன்றவை நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், நடுத்தர வர்க்கத்தினரும்,  தனியார் நிறுவன பணியாளர்களும் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


இந்தியாவை 2024-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாகவும், 2032-ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாகவும் உயர்த்தப்போவதாக மத்திய அரசு உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கும் நிலையில், கள நிலையும், யதார்த்தமும் வேறுவிதமாக உள்ளன. இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அப்பட்டமாக அனைவருக்கும் தெரிகிறது.


இரு சக்கர வாகனங்களில் தொடங்கி மகிழுந்துகள், பேருந்துகள், சரக்குந்துகள் மற்றும் பல்வகை பயன்பாட்டு வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களின் விற்பனையும் கடந்த 9 முதல் 10 மாதங்களாக  கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால் டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், மகிந்திரா, மாருதி சுசுகி, டொயோட்டா, அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கும் வகையில், கடந்த சில வாரங்களில் 2 முதல் 9 நாட்களை பணியில்லாத நாட்களாக அறிவித்துள்ளன. டி.வி.எஸ். குழுமத்தின் லூகாஸ், சுந்தரம் & கிளேட்டன் நிறுவனங்களும் உதிரிபாகங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இனிவரும் நாட்களில் இந்த நிறுவனங்கள் இன்னும் அதிக பணியில்லாத நாட்களை அறிவிக்கக்கூடும். 


இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் ஏராளமான  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் எந்த நேரமும் மூடப்படும் நிலையில் உள்ளன. வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் கடந்த சில வாரங்களில் மட்டும் 3 லட்சத்துக்கும் கூடுதலான பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் மேலும் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து நிலவி வருகிறது. இதைப் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.


மோட்டார் வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை, அத்துறையின் பின்னடைவாக மட்டும் பார்க்கக் கூடாது. இரு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள் ஆகியவற்றின் விற்பனை என்பது நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார நிலையையும், சரக்குந்துகள், இழுவை ஊர்திகள் ஆகியவற்றின் விற்பனை தொழில்துறை மற்றும் வேளாண்துறையின் செழிப்பையும் காட்டும் பிரதிநிதித்துவங்கள் ஆகும். அந்த வகையில் மோட்டார் வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதையும், நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கம் நெருக்கடியில் இருப்பதையும் காட்டுகிறது.


இந்தியாவின் தொழில்துறை உற்பத்திக்கு 40% பங்களிக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு, உரம், எஃகுத்துறை, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 துறைகளின் வளர்ச்சி கடந்த ஜூன் மாதத்தில் 0.2% ஆக குறைந்து விட்டதில் இருந்தே தொழில்துறை எந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை அறியலாம். தொழில்துறையைக் கடந்து சேவைத்துறையின் முக்கிய அங்கமான மென்பொருள் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு தொடங்கியுள்ளது. இத்தகைய நிலை நீடிக்குமானால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். அவற்றை நினைத்துப் பார்க்கவே மிகவும் அச்சமாக உள்ளது.


இந்தியப் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருகிறது என்பதை மத்திய அரசும் உணர்ந்துள்ளது. பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக, ரிசர்வ் வங்கி மூலம் வங்கிகளின் வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்து வருகிறது. ஆனால், இது எதிர்பார்க்கும் அளவுக்கு பயனைத் தராது. ஏனெனில், இதன் பயன்கள் தொழில்துறையினரை சென்றடையவில்லை. கடந்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கி 1,10% அளவுக்கு வட்டியை குறைத்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகள் 0.15 முதல் 0.30% வரை  மட்டும் தான் வட்டிக்குறைப்பு வழங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, பொதுத்துறை வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால், அவற்றால் பெரிய அளவில் கடன் வழங்க முடியாது. எனவே, நிதி சார்ந்த நடவடிக்கைகளால் வளர்ச்சியைத் தூண்ட முடியாது. இதை வல்லுனர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.


மாறாக, நுகர்வை அதிகரிக்கும் வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலமாகத் தான் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும். கடந்த 2008-09 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது இத்தகைய நடவடிக்கைகள் தான் கை கொடுத்தன. இப்போதும் அதேபோன்று குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்குவிப்பு சலுகைகளை அளித்தால் தான் இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலையைப் போக்கி, அனைத்துத் துறைகளையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது சாத்தியமாகும்.


மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைத்து அப்பொருட்களை அதிக அளவில் வாங்கச் செய்தல், ஏற்றுமதிக்கு சலுகைகளை அறிவித்து, அதிக அளவிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய வைத்து அன்னிய செலாவணியை ஈட்டுதல், உட்கட்டமைப்புத் துறையில் மிக அதிக அளவில் முதலீடு செய்வதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்தல் உள்ளிட்ட ஊக்குவிப்பு சலுகைகள் தான் இன்றைய நிலையில் உடனடித் தேவையாகும். எனவே, அத்தகைய ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்து, அனைத்து துறைகளுக்கும் புத்துயிரூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும்.