கொரோனா வைரஸ் தடுப்பு.. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்
உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை: பொதுமக்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது சமூக வலைதளத்தில், நீங்கள் அறிந்திருக்கலாம்.. உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை (Coronavirus Pandemic) ஒரு தொற்று நோயாக அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்துடன், தமிழக ஹெல்த் நிர்வாகம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. இந்த நோய் குறித்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவும், பயணத்தைத் தவிர்க்கவும், சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்களுகு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது, இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர். கை மற்றும் சுவாசிப்பதில் சுகாதாரத்தை கடைபிடிக்கவும், அதிகமான கூட்டம் இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.