புதுவையில் வரும் 11-ஆம் நாள் முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவது கட்டாயம் என டிஜிபி சுந்தரி நந்தா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு புதுச்சேரியில் மே மாதம் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவித்த முதல்வர் நாராயணசாமி, மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவித்தார். 


ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்பு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த எதிர்ப்புகளின் காரணமாக தலைகவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்றும், அறிவுரை கூறினால் போதும் என்றும் முதல்வர் அறிவித்துவிட்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் புதுவையில் தலைகவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.


முன்னதாக தலைகவச சட்டத்தில் முதல்வர் அளித்த தளர்வு காரணமாக கடந்த 13 மாதங்களில் 114 பேர் விபத்துகளில் உயிரிழந்திருக்கின்றனர் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் குற்றம்சாட்டினார். இந்நிலையில் தற்போது மீண்டும் புதுவையில் தலைகவசம் அணிய அதிரடி கட்டுப்பாடு கொண்டுவரப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதன்படி வரும் பிப்ரவரி 11-ஆம் நாள் முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவது கட்டாயமாகும். 


மீறுபவர்களுக்கு முதல்முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 300 ரூபாய் அபராதமும், மூன்றாவது முறை மீறுபவர்களுக்கு 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். 


அதேபோல் கார்களில் செல்பவர்களும் வரும் திங்கட்கிழமை முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு தலைகவசத்திற்கு விதிக்கப்படும் அபராதங்களே விதிக்கப்படும் என புதுவை டிஜிபி தெரிவித்துள்ளார்.