காலநிலை மாற்றத்தின் தீமைகளை தடுக்க அவசர நிலை பிரகடனப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., "காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் எதிர்பார்க்கப்பட்டதை விட மிக மோசமாகவும், விரைவாகவும் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. அத்தீமைகளை கட்டுப்படுத்த உலக நாடுகள் வேகமாக செயல்பட்டுக்  கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும் விரைவாக செயல்பட வேண்டிய அவசரம் ஏற்பட்டிருக்கிறது.


தொழில் வளர்ச்சி என்ற பெயரில் உலகின் வளர்ந்த நாடுகளும், முன்னணி வளரும் நாடுகளும் போட்டிப் போட்டு சுற்றுச்சூழலை சீரழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதன் விளைவாக காலநிலை மாற்றம் என்ற பெரும் தீமை உலகை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. தொழில் உற்பத்தி, போக்குவரத்து,  குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட  காரணங்களால் வெளியாகும் கரியமில வாயுவின் அளவு பத்து லட்சத்தில் 415 பங்கு என்ற அளவை  விஞ்சிவிட்டது. இதை 350 பங்காக கட்டுப்படுத்தாவிட்டால் 2050-ஆம் ஆண்டுக்குள் புவிவெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்; அதனால், பனிமலை உருகுதல், வரலாறு காணாத வறட்சி, விவசாயம் முற்றிலுமாக அழிந்து போவது, பருவமழை பொய்ப்பது உள்ளிட்ட மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சப்பட்டது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. 


காலநிலை மாற்றத்தின்  தீமைகள் 2050-ஆம் ஆண்டு வாக்கில் புவி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் போது தான் வெளிப்படத் தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்த நம்மை அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புவிவெப்பநிலை இப்போது 1.1 டிகிரி செல்சியஸ்  அதிகரித்துள்ள நிலையில், இதுவே உலகம் முழுவதும் பல்வேறு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. உலக வரலாற்றில் கடந்த ஜூலை மாதம் அதிக வெப்பம் நிலவிய மாதம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இதமான தட்பவெப்ப நிலை நிலவக்கூடிய பாரிஸ் நகரில் கடந்த ஜூலை 25-ஆம் தேதி வரலாறு காணாத வகையில் 42.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஐரோப்பாவில் கடுமையான அனல் தகித்தது.


இந்தியாவிலும் அதன் தாக்கங்களை உணர முடிகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் கடுமையான வெப்பமும், வறட்சியும் நிலவுகிறது. மும்பையில் வரலாறு காணாத மழை கொட்டி பாதிப்பை ஏற்படுத்துகிறது. புவி வெப்பநிலை அடுத்த சில ஆண்டுகளுக்குள் 1.5% செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து விடும். அதை நாம் தடுக்காவிட்டால் இன்னும் கூடுதலான பேரழிவுகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். உலகம் முழுவதும் காலநிலை மாற்ற அகதிகள் அதிகரித்து விடுவார்கள். இவற்றுடன் ஒப்பிடும்போது புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் இப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காட்டாற்று வெள்ளத்தை மணலால் அணை கட்டி தடுக்க முயல்வதற்கு ஒப்பான செயலாகவே இருக்கும்.


மாறாக போர்க்காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் தான் மின்னல் வேகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதே போன்றதொரு சூழல் ஏற்பட்டதாக நினைத்துக் கொண்டு காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தான் அவை தீவிரமானவையாகவும், முழுமையானவையாகவும் இருக்கும். உலகின் மிகப்பெரிய சாதனைகள் போர்க் காலங்களில் தான் நிகழ்த்தப்பட்டுள்ளன. சாதாரணமாக 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய  பணிகளை போர்க்காலங்களின் போது  5 ஆண்டுகளில் ஓர் அரசு சிறப்பாக செய்யும். இன்றைய உலகின் பல நவீனங்கள் இரண்டாம் உலகப் போரினாலும், அமெரிக்க-ரஷ்ய பனிப்போரினாலும்  உருவானவையாகும்.


அதனால் தான், தான் காலநிலை மாற்றத்தின் தீமைகளை தடுப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், காலநிலைமாற்ற அவசர நிலையை பிரகரனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது. நியூயார்க் நகரில் வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றம் குறித்த சிறப்பு மாநாடும்,  அதே வாரத்தில் நீடித்த வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாடு மற்றும் ஐநா பொது அவை கூட்டமும் நடைபெறவுள்ளது. அப்போது அதில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், செப்டம்பர் 20 முதல் 27 ஆம் நாள் வரை அமெரிக்கா உட்பட உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் காலநிலைமாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படவிருக்கின்றன.


அதுமட்டுமின்றி, காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் நோக்கத்துடன்,  இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்னி உள்ளிட்ட பெருநகரங்களின் மாநகர அவைகளிலும் கடந்த ஓராண்டில் காலநிலைமாற்ற அவசர நிலை பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளன. 18 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 உள்ளாட்சி அமைப்புகளும் இத்தகைய  பிரகடனங்களை நிறைவேற்றியிருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.


உலகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்கள் ஆகியவையும் இத்தகைய பிரகடனத்தை வெளியிட்டு, காலநிலை மாற்றத்தின் தீமைகளை தடுக்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. இதே அக்கறையும், பொறுப்பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இருக்க வேண்டும். அதை வெளிப்படுத்தும் வகையிலும், செயல்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசும், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசும் காலநிலை மாற்ற அவசர நிலை பிரகடனத்தை நிறைவேற்ற வேண்டும். அப்பிரகடனத்தின் அடிப்படையில் காலநிலை மாற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புவியைக் காப்பாற்ற இந்தியா பங்களிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.