கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும் -இராமதாசு!
கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரம் கருதி, அவர்களுக்கு ஊதியம் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் மொத்தம் 105 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 91 கல்லூரிகளின் நிர்வாகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 14 கல்லூரிகளின் நிர்வாகம் பல்கலைக்கழகங்களிடமும் இருந்து வருகின்றன. 91 அரசு கல்லூரிகளில் மட்டும் காலை நேர கல்லூரிகளில் 2423 பேர், மாலை நேர கல்லூரிகளில் 1661 பேர் என மொத்தம் 4084 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த ஊதியமும் அவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படாததால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து வாடுகின்றனர்.
READ | பிற மாநில தமிழ்ப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர்க்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் -PMK!
கவுரவ விரிவுரையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பது கடினமான ஒன்றல்ல. கால சூழலை கருத்தில் கொண்டு சிறப்பு ஆணை பிறப்பிப்பதன் மூலம் அவர்களின் பிரச்சினையை எளிதாக தீர்த்துவிட முடியும். கவுரவ விரிவுரையாளர்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றினாலும், அவர்கள் 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தான் நியமிக்கப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படும். மே மாதத்திற்கு ஊதியம் கிடையாது. ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்திற்கு கூட, புதிய நிதியாண்டு பிறந்த பிறகு தான் நிதி ஒதுக்கப்படும் என்பதால் அந்த ஊதியம் ஜூன் மாதத்தில் தான் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு விடும் என்பதால் தொடர்ந்து ஊதியம் கிடைக்கும்; வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கல்லூரிகள் திறக்கும் தேதி இன்று வரை முடிவு செய்யப்படவில்லை. அதனால், கவுரவ விரிவுரையாளர்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. அதேநேரத்தில் கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்படும் அனைத்து பணிகளையும் கவுரவ விரிவுரையாளர்கள் செய்து வருகின்றனர். அத்துடன் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தி வருகின்றனர். இத்தகைய பணிகளையும் கடுமையான வறுமையிலும், குடும்பத்தினரின் துயரங்களுக்கு இடையிலும் தான் செய்து வருகின்றனர். ஆசிரியர் பணி என்பது உலகின் உன்னதமான பணி. உலகை இயற்கை உருவாக்கியது என்றாலும் கூட, உலகில் இன்று ஏற்பட்டுள்ள அனைத்து வளர்ச்சிகளுக்கும், அறிவியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக இருந்தவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்டவர்கள் ஊதியம் இல்லாமல் வாடுவதை அரசு பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது; உடனடியாக இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்கள் அனைவருக்கும் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கும் ஒப்பந்தத்தை நீட்டித்து அரசாணை பிறப்பிப்பதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்த்து விட முடியும். அதன் மூலம் நிலுவையில் உள்ள ஏப்ரல் மாத ஊதியமும், புதிய கல்வியாண்டில் ஜூன் மாதத்திற்கான ஊதியமும் உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், இனி வரும் மாதங்களுக்கான ஊதியத்தையும் அவர்களுக்கு தடையின்றி கிடைக்கச் செய்ய முடியும். எனவே, 4084 கவுரவ விரிவுரையாளர்களில் விருப்பமுள்ளவர்கள் அனைவருக்கும் ஒப்பந்தத்தை நீட்டித்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
READ | கொரோனா பதற்றத்தை போக்க மனம் திறந்து பேசுங்கள்... -இராமதாசு!
அதுமட்டுமின்றி, கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று 2010-ஆம் ஆண்டிலும், ரூ.40 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று 2017-ஆம் ஆண்டிலும், ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று 2019-ஆம் ஆண்டிலும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.15,000 என்ற மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி, கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்தும் தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.