மேட்டூர் அணையிலிருந்து 20-ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு ஜெ.,
சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து 20-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு உரிய நீரை வழங்கிட வேண்டும் என தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாளொன்றுக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கிடைக்கும் வகையில் 5.9.16 முதல் 10 நாட்களுக்கு அதன் அணைகளிலிருந்து நீரை விடுவிக்கவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணை வழங்கியது.
பின்னர், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 12.9.16 முதல் 20.9.16 வரை நாளொன்றுக்கு 12 ஆயிரம் கனஅடி நீரை விடுவிக்கவேண்டும் என்றும், இந்த ஆணை 20.9.16 வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவிட்டது.
மேட்டூர் அணையில், 16.9.16 அன்றைய நிலவரப்படி 84.76 அடி நீர் உள்ளது. கர்நாடக நீர்த்தேக்கங்களிலிருந்து சுப்ரீம் கோர்ட்டு ஆணைகளின்படி, நீர் கிடைப்பதை எதிர்நோக்கியும், காவிரி மேற்பார்வைக் குழு நமக்குரிய நீரை கர்நாடகம் வழங்கிட உத்தரவு வழங்கும் என்பதன் அடிப்படையிலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக 20.9.16 முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன் என அதில் கூறப்பட்டுள்ளது.