கூவம் ஆற்றில் மணல் கடத்தல்! கமல்ஹாசன் காட்டமான அறிக்கை
கூவம் ஆற்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக மணல் கொள்ளை நடப்பதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மணல் திருட்டுகள் நடைபெற்று வருகிறது. நீதிமன்றங்கள் பல முறை கண்டித்தும் தொடர்ந்து திருட்டுகள் நடைபெறுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் கூவம் ஆற்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக மணல் கொள்ளை நடப்பதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " எண்ண எண்ண பெருகும் வருத்தம்! கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சர்யம்? இந்த மணல் கொள்ளை நடப்பது தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில். நாற்புறமும் அரசு அலுவலங்கள் உள்ள பகுதியில். ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது.
மிக மிக குறைந்தபட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு. இவையெல்லாவற்றையும் விட பெரும்கொடுமை என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள். அப்படியெனில், இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப் போவது யார்? அதில் வாழப் போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழியல் மிக மோசமாக அழிந்துவருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள். அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா? " என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது, கூடிய விரைவில் பிக் பாஸ் ஷூட்டிங் நடைபெறும் என்று எதிர்ப்பாக படுகிறது.
ALSO READ Bigg Boss Tamil Season 5 Latest Updates: பிக்பாஸ் இல் சூப்பர் சிங்கர் பிரியங்கா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR