வரும் 26 ஆம் தேதிவரை ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.என்.எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.


இந்த வழக்கில், அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. தாம் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அங்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.


இதற்கிடையில், தெற்கு டெல்லியின் ஜோர் பாஃக்கில் உள்ள சிதம்பரத்தின் இல்லத்திற்கு 4 முறை சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அமலாக்கத்துறையினரும் வீட்டைக் கண்காணித்தனர். ப.சிதம்பரம் அங்கு இல்லாததை அடுத்து 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது. இதைத் தொடர்ந்து, 25 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றிரவு சிதம்பரம் கைது செய்யப்பட்டார். மாலையில் அவர் காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.


அதைத் தொடர்ந்து சிதம்பரம் கைது செய்யப்பட்டார். வீட்டின் இரும்புக் கதவை பூட்டி இருந்ததால் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற அதிகாரிகள் சிதம்பரத்தைக் கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டு சென்றனர். நிதி அமைச்சர் பதவி வகித்த போது அவர் முன்னிலையில் திறக்கப்பட்ட, சிபிஐ விருந்தினர் இல்ல தளத்தில் சிதம்பரம் காவலில் வைக்கப்பட்டார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.


நோட்டீஸ் அளிக்கப்பட்ட போதிலும் விசாரணைக்கு ஆஜராகதது ஏன்? முன் ஜாமீன் மறுக்கப்பட்ட பிறகு எங்கு சென்றீர்கள்? ஆகிய கேள்விகளை சிபிஐ கேட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து பிற்பகல் 3 மணி அளவில் ரவுஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார். இதை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


நீதிபதி அஜய் குமார் குஹார் (Ajay kumar kuhar) முன்னிலையில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். சிதம்பரம் சார்பில் வாதங்களை முன் வைக்க அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான குழு ஆஜரானது. சிபிஐ சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உதவி சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகியோர் வாதிட்டனர்.


அப்போது ப.சிதம்பரம் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று புகார் கூறிய சிபிஐ, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் இன்னும் மிகப்பெரிய சதித் திட்டங்கள் இருக்கக் கூடும் என்பதால் அதை வெளிக்கொண்டு வர காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்; வரும் 26 ஆம் தேதிவரை ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், ப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிராக பி.சிதம்பரத்தின் மனுவை ஆகஸ்ட் 27 அன்று விசாரிக்க உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.