விருதுநகர் பாலியல் வழக்கு: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்-சீமான்!
மனிதத்தன்மையே துளியுமற்று, இதுபோன்ற ஈவிரக்கமற்ற கோரச்செயல்களில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்க வேண்டும்.
விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விருதுநகரில் இளம்பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி திமுக நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் என 8 பேர் கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்யும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விருதுநகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுஞ்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அண்மைக்காலத்தில் பெண்களுக்கெதிராகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைகளும், அத்துமீறல்களும் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தானப் பெருங்கவலையைத் தருகின்றன.
மேலும் படிக்க | One more Nirbaya: என்று தீரும் இந்த நிர்பயா பாணி பாலியல் வன்கொடுமைகள்?
அத்தங்கைக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன். மனிதத்தன்மையே துளியுமற்று, இதுபோன்ற ஈவிரக்கமற்ற கோரச்செயல்களில் ஈடுபடுவர்கள் எவராயினும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனையை உறுதிப்படுத்த தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை சமரசமற்றுச் செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட அத்தங்கைக்கு உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சிகிச்சையளித்து, அவர் இப்பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, கைதூக்கிவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று எழுதியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR