’மாநில உரிமையை பறிக்கிறது’ அணை பாதுகாப்பு சட்டத் திருத்தத்துக்கு சீமான் கடும் எதிர்ப்பு
மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பறிக்கும் அணை பாதுகாப்பு சட்ட திருத்த வரைவினை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைக் குலைத்து, ஒற்றைமயமாக்கல் மூலம் தொடர்ந்து அதிகாரக் குவிப்பில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அணை பாதுகாப்பு சட்ட வரைவு எனும் பெயரில் அணைகள் மீதான மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு முயல்வதாக கண்டம் தெரிவித்துள்ள அவர், இந்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2018 ஆம் ஆண்டு மக்களவையில் இந்த மசோவை, மோடி அரசு நிறைவேற்றியதாகவும், இப்போது நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகளவிலான எண்ணிக்கையில் அணைகளைக் கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது எனக் கூறியுள்ள சீமான், மத்திய அரசு கொண்டு வரும் இந்த புதிய மசோதாவின் மூலம் அணைகள், நீர்த்தேக்கங்கள் மீதான மாநிலங்களின் உரிமையும், கட்டுப்பாடும் முற்றிலும் பறிக்கப்பட்டு விடும் என அச்சம் தெரிவித்துள்ளார். இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தங்கள் யாவும் தள்ளுபடி செய்யும் வகையில் இச்சட்ட வரைவு வடிவமைக்கப்பட்டிருப்பதாக சீமான் கூறியுள்ளார். இதனால், அண்டை மாநிலங்களுடனான தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும் என எச்சரித்துள்ள அவர், முல்லைப்பெரியாறு மற்றும் பரம்பிக்குளம் அணைகள் மீதான தமிழகத்தின் உரிமை பறிபோய்விடும் எனக் கூறியுள்ளார்.
ALSO READ | இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? சீமான் கண்டனம்
மேலும், இச்சட்டவரைவின் மூலம் கிடைக்கும் அணைகள் மீதான அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் ஏற்படும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆட்சிக்கு வந்தது முதல் பொதுப்பட்டியலில் இருந்த அதிகாரங்களை அத்துமீறி தன்வயப்படுத்தி வந்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது மாநிலப் பட்டியலில் இருக்கும் அதிகாரங்களையும் தன்வயப்படுத்தத் தொடங்கியிருப்பது பெரும் அதிகார அத்துமீறல் என கூறியுள்ளார். இத்தகைய ஆபத்து மிக்க இந்த சட்டவரைவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR