இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்தியக் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் அன்புத்தம்பி வீரகுமார் படுகாயமடைந்த செய்தியறிந்து கடும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கைது செய்யப்படும் சூழலில், இந்தியக் கடற்படையும் தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 20 ஆம் தேதியன்று நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன்பிடித்தாகக்கூறி அருள், ஐயப்பன், சுந்தரம் ஆகிய 3 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பபட்டினம் மீனவர்கள் 8 பேர் நேற்று முன்தினம்தான் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய நிலையில், நேற்று மேலும் 3 தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்துள்ளது, தமிழர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி மனப்பான்மையை உறுதிப்படுத்துவதோடு, இக்கைதுகள் யாவும் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் வன்மத்தின் வெளிப்பாடுகள்தான் என்பதையும் நிறுவுகிறது.


இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு எதிராக தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்க, தற்போது இந்தியக் கடற்படையும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது அவர்களை வாழவே முடியாத அளவிற்கு அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். இதுவரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது ஒரே ஒரு முறை கூடத் தடுத்துக் காப்பாற்ற வக்கற்ற உலகின் நான்காவது மிக வலிமையான இராணுவமான இந்தியக் கடற்படை, சொந்த நாட்டு மீனவர்களை மட்டும் குறி தவறாமல் சுடுவதென்பது தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் எழுப்புகிறது. உலகிலேயே சொந்த நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒரே கடற்படை இந்தியக் கடற்படையாகத்தான் இருக்க முடியும்.


மேலும் படிக்க | கான்வாயை நிறுத்துங்க... பதறித்துடித்த ஸ்டாலின் - வைரலாகும் வீடியோ


தமிழர்களின் மொழி உரிமை, கல்வி உரிமை, பொருளாதார உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பறித்துச் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்ற அகதிகளாக மாற்ற முயல்வது, அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளைக்கூடச் சட்டத்தின் துணைகொண்டு தரமறுப்பது, அவர்களின் நிலவளம், கடல் வளம், கனிம வளம் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது, தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணி அதிகார அடக்குமுறைகளின் மூலம் அவர்களின் உயிர்களைப் பறிப்பது என இந்திய ஒன்றிய அரசின் செயல்பாடுகள் யாவும் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இந்நாட்டின் மீது அணுவளவும் பற்று ஏற்படாதவாறு மிகப்பெரும் வெறுப்பையும், கோவத்தையுமே ஏற்படுத்தி வருகின்றது என்பதே எதார்த்த உண்மையாகும். இதே நிலை நீடித்தால் மிகப்பெரிய விலையை இந்த நாடு கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர்ந்து, இனியேனும் தமிழர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்பதை நினைவில் கொண்டு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.


எனவே, தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் நடவடிக்கை எடுப்பதோடு, சுடப்பட்ட அன்புத்தம்பி வீரகுமார் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும். மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் இனியும் தொடராது தடுத்து நிறுத்த, இந்திய ஒன்றிய அரசின் மூலம் நிரந்தரத் தீர்வுகாண திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | நீட் தேர்வு: மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ