வெளியாவாரா செந்தில் பாலாஜி...? ஒரு வழியாக ஜாமீன் மனு தாக்கல்!
Senthil Balaji Bail Petition: அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
Senthil Balaji Bail Petition: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சுழல் நிலவியது.
இதனையடுத்து அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் அதுதொடர்பான ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அருண் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி, மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். இதை எடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, எந்த தகுதியின் அடிப்படையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் விசாரணைக்கு பின் கடந்த செவ்வாய்கிழமை (செப். 5) தீர்ப்பளித்தது.
அதில், முதல்வர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனடிப்படையில் மனுதாரர்கள் கொண்டுள்ள கவலை நியாயமானதுதான் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டும் அல்லாமல், தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் எந்த பலனும் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் எந்த உத்தரவு பிறப்பிக்க இயலாது என கூறியதுடன், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | சனாதனம் என்பது எச்.ஐ.வி போன்றது-ஆ.ராசா பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ