மின் கட்டணம் உயர்வு, ஆனால்... மின்சார வாரியம் விளக்கம்!
Electric Bill Hike: வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Electric Bill Hike: வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்தகால ஆட்சியில் இருந்த திறனற்ற மேலாண்மையால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மோசமாக பாதிப்படைந்து இருந்தது. மேலும், ஒன்றிய அரசின் 2021ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடம் இருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது.
ஜூலை 1 முதல் அமல்
மேலும், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசின் ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும். இந்த விலை உயர்வினால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்தாண்டு செப். 9ஆம் தேதி அன்று 2022-23ஆம் ஆண்டு முதல் 2026-27ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண வகையில் (MYT) வழங்கியது.
மேற்படி உத்தரவில் 2022-23ஆம் ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அறிவித்தது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட கட்டண உயர்வு முறையை அறிவித்தது. அதன்படி ஆண்டுதோறும். ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் (Price Index) ஒப்பிடு செய்து கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு (Consumer Price Inflation) அல்லது 6%, இவற்றில் எது குறைவோ இந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும்.
மேலும் படிக்க | கருணாநிதி நினைவகம் ஆகஸ்டு 7-ந் தேதி திறப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் அறிவுரை...
இதன்படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்தவரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர், தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த முடிவால்...
இதனால், கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இந்த குறைந்த உயர்வில் இருந்தும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கோடு, வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டார். இந்த முடிவால்,
1. வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.
2. வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
3. வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்.
மற்ற மாநிலங்களில் எவ்வளவு உயர்வு?
இந்த ஆண்டு நமது நாட்டின் பிற மாநிலங்களில் வீட்டு இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த உயர்வுகளோடு ஒப்பிடும் போது மகாராஷ்டிரா (62 பைசா / யூனிட்), கர்நாடகா(70 பைசா / யூனிட்), ஹரியானா (72 பைசா/யூனிட்), மத்திய பிரதேசம் (33 பைசா/யூனிட்), பீகார் (147 பைசா/யூனிட்) - தமிழ்நாட்டில் வீட்டு மின்இணைப்புகளுக்கு மின்கட்டணங்கள் எவ்விதமும் உயர்த்தப்படாதது மட்டுமன்றி, வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ