மத்திய அரசு அரசியல் நோக்கத்தோடு ரெய்டு நடத்த கூடாது -ஸ்டாலின் அறிவுரை
மத்தியில் உள்ள சிபிஐ அமைப்பும், வருமான வரித்துறையினரும் அரசியல் நோக்கத்தோடு யாரையும் அணுக கூடாது என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று தென்னூரில் உள்ள, பெரிய நாச்சியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றார்.
அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர் பேசியது:
சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது பற்றி உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறுகையில்,
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடுகளில் நடந்த சோதனைகளை அவர்கள் சட்டப்படி சந்திப்பார்கள் என்று ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன்.
ஆனால், என்னை பொறுத்தவரையில், அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகம், அவரது மகன் வீடு என இப்படி பல இடங்களில் இதற்கு முன்பாக சோதனைகள் நடந்திருக்கின்றன.
அவையெல்லாம் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன? அவற்றின் மீதான நடவடிக்கைகள் எல்லாம் இப்போது முடங்கியிருக்கின்ற காட்சிகளை பார்க்கின்றபோது, அரசியல் நோக்கத்தோடு இதையெல்லாம் மத்திய அரசு அணுக கூடாது, மத்தியில் உள்ள சிபிஐ அமைப்பும், வருமான வரித்துறையினரும் அரசியல் நோக்கத்தோடு அணுக கூடாது என்பதுதான் எங்களின் கருத்து என அவர் கூறினார்.