சிவகங்கை அருகே தலைமை ஆசிரியை கொடூர கொலை - 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை !!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியாக வசித்து வந்த தலைமை ஆசிரியை, அரிவாளால் வெட்டி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். 20 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்திற்காக,நடு இரவில் மர்ம நபர்களால் அரங்கேற்றப்பட்டதா இந்த கொடூரம் ?
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர், 52 வயதான ரஞ்சிதம். இவர் தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கணவர் இறந்த நிலையில், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்த ரஞ்சிதம், தான் பணிபுரிந்த அரசுப் பள்ளியிலேயே அதிக நேரத்தை செலவிட்டு வந்தார். மேலும், பணி நேரம் போக தன்னந்தனியாக திருப்பத்தூர் தங்கமணி திரையரங்கம் எதிரே உள்ள கான்பா நகரில் தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 9 மணிக்கு மேல் ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு செல்லவில்லை.
இதனால் சக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் ரஞ்சிதத்தின் அலைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தனர். ஆனால் அழைப்பை அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெண் ஆசிரியர்கள் இருவர், ரஞ்சிதத்தின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது. இதனையடுத்து வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த ஆசிரியர்கள் அதிர்ந்து போனார்கள்.
தலைமை ஆசிரியர் ரஞ்சிதம் ரத்த வெள்ளத்தில் குப்புறக் கிடந்துள்ளார். பார்த்ததும் பதறிப்போனவர்கள் திருப்பத்தூர் நகர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு விரைந்து வந்த போலீஸார், சம்பவ இடத்தை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர். உடலை ஆய்வு செய்தவர்கள் ரஞ்சிதம், அரிவாளால் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டதை உறுதி செய்தனர். பின்னர், தடயவியல் வல்லுநர்களும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் கிடைத்த தடயங்களைச் சேகரித்துக் கொண்டனர். பின்னர், உயிரிழந்த தலைமை ஆசிரியரின் உடல் பிரேத பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | திமுக கவுன்சிலர் வீட்டில் கொள்ளை; மிளகாய்பொடி தூவி செயினை பறித்துச் சென்ற மர்ம பெண்
இதற்கிடையே, முதற்கட்ட விசாரணையில், ரஞ்சிதம் அணிந்திருந்த செயின், வளையல் உட்பட 20 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரஞ்சிதத்தின் வீட்டு அருகே இருக்கும் பெட்ரோல் பங்கின் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையில் முடிவில்தான் தலைமை ஆசிரியரின் கொலைக்கான முழுக் காரணமும் வெளிவரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ