சிவகாசி இளைஞர் படுகொலை... `இது ஆணவக் கொலை இல்லை` - எஸ்.பி., கொடுத்த விளக்கம் என்ன?
Sivakasi Youth Murder: சிவகாசியில் 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இளைஞர், அவரது மனைவியின் அண்ணன்களால் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், இது ஆணவக் கொலை இல்லை என விருதுநகர் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
Sivakasi Youth Murder Latest News Updates: சிவகாசி கிழக்குப்பகுதி முத்துராமலிங்கம் காலனியை சேர்ந்த பொன்னையா. இவரது மகள் நந்தினி (23). ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த மாரிமுத்து - பாண்டிச் செல்வி தம்பதியரின் மகன் மெக்கானிக் கார்த்திக்பாண்டி (26).
கார்த்திக் பாண்டியின் தாய்- தந்தை வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். தாய்- தந்தை இறந்த பின்பு கார்த்திக் பாண்டி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். கார்த்திக் பாண்டி, நந்தினியை கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். கார்த்திக் பாண்டியின், தந்தையின் சமூகத்தை சேர்ந்தவர்தான் நந்தினி எனவும் கூறப்படுகிறது.
பெண் வீட்டாரை மீறி திருமணம்
இருந்தாலும் இவர்களின் காதலுக்கு நந்தினியின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. கார்த்திக் பாண்டியின் தாய் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக நந்தினியின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கார்த்திக் பாண்டி - நந்தினி திருமணம் நடந்துள்ளது.
திருமணம் நடந்த கையோடு சிவகாசி மேற்கு பகுதி அய்யம்பட்டி கிராமத்தில் தனி வீடெடுத்து இளம் தம்பதியினர் வசித்து வந்தனர். சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை தேவர்குளத்தில் கார்த்திக் பாண்டி வாகனங்கள் பழுது நீக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். நந்தினி அதே சாலையில் சாமியார் மடம் அருகே பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தனது தங்கையை கார்த்திக் பாண்டி காதலித்து திருமணம் செய்தது பிடிக்காமல் நந்தினியின் சகோதரர் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பிரேக் அப் செய்த டியூஷன் டீச்சர்! பழி வாங்கிய பள்ளி மாணவன்
இரவில் நடந்த படுகொலை
இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை 25) மெக்கானிக் ஷெட்டை மூடிவிட்டு கார்த்திக் பாண்டி தனது மனைவி நந்தினியை வேலை முடித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல இருசக்கர வாகனத்தில் சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே காத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலன் மற்றும் இவர்களது நண்பர் சிவா ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கார்த்திக் பாண்டியை தாக்க முற்பட்டனர்.
அவர்களிடம் இருந்து சூப்பர் மார்க்கெட்டிற்குள் தப்பியோட முயன்றவரை சூப்பர் மார்க்கெட்டின் நுழைவாயிலில் மடக்கிப்பிடித்து மூவரும் சேர்ந்து சரமாரியாக வெட்டியதில் கார்த்திக் பாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
ஆணவ கொலையா...? இல்லையா...?
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கார்த்திக் பாண்டியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவோடு, இரவாக அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, சிவகாசி வட்டார காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையே கார்த்திக் பாண்டியை கொலை செய்துவிட்டு வாகனத்தில் தப்பியோடிய மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட மல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சரணடைந்த மூவரையும் போலீசார் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு ரகசியமாக அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருத்தங்கல் போலீசார் இக்கொலை ஆணவ கொலையா? அல்லது கொலைக்கான காரணம் வேறு ஏதும் உண்டா! என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விருதுநகர் எஸ்பி விளக்கம்
தற்போது இந்த படுகொலை குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,"விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று இரவு கார்த்திக் பாண்டியன் என்பவர் அவர் காதல் திருமணம் செய்த அவரது மனைவி நந்தினி என்பவரது சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவர்களது நண்பர் சிவா ஆகியோரால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தை ஆணவக்கொலை என்று தவறாக சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது ஆணவக்கொலை அல்ல" என விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அந்த அறிக்கையில்,"இறந்தவரும் அவர் காதல் திருமணம் செய்த பெண்ணும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். இறந்தவர் திருமணம் செய்து அதே பகுதியில் வாழ்ந்து வருவது பிடிக்காமல் அவரிடம் குற்றவாளிகள் இருவரும் தகராறு செய்துள்ளார்கள். மேலும் சமீபத்தில் அவர்களது மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்து இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. எனவே தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கக்கூடாது - தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ