மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இதையடுத்து, ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனிடையே, பாஜகவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 3 கட்சிகளும் தொடர்ந்து பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தின.


இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், டெல்லியில் கட்சியின் மேலிடத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை இன்று சந்தித்துப் பேசினர். இதனை தொடர்ந்து சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சோனியா ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மராட்டியத்தின் அரசு அமைப்பது குறித்து வியாழக்கிழமை முக்கிய தகவல் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனால் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பிரதமர் நரேந்திர மோடியை, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் ஆட்சியமைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை நடத்திய சூழ்நிலையில், பாஜகவுக்கு ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரலாம் என்றும், சரத் பவாரை குடியரசு தலைவராக்க பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியை சரத் பவார் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.