8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம். பருவத்தேர்வு முறை ரத்து குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


2019-2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 5 ஆம் வகுப்பு படிக்கும் கிராமபுற மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலை உருவாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இதனால் குழந்தை தொழிலாளர்கள் பெருகும் நிலையும் உருவாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு பயத்தால் தத்தளித்து வருகின்றனர். 


இந்நிலையில், ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில்; 


தமிழக முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ரூ.3 லட்சத்து 430 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 


இதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவத்தேர்வு முறை ரத்து குறித்து அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் மூலம் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதல் சிறப்பு வகுப்பு அளிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஈரோடு மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம். பருவத்தேர்வு முறை ரத்து குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.