கொடைக்கானலில் பிரபலமாகி வரும் போதை காளான் விற்பனையை தடுக்க, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழக சுற்றுளா தளங்களில் முக்கியமான ஒன்றாகும். ஆண்டுதோறும் சீசன் மற்றும் கோடை காலத்தில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருக்கும்.


ஆனால் சமீப காலமாக கொடைக்கானல், போதை காளானுக்கும் பெயர் பெற்ற இடமாக மாறி வருகிறது. வட்டக்கானல், பெரும்பள்ளம், வில்பட்டி, மன்னவனுார் பகுதியில், போதை காளான் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. இதில் சில வகை காளானில், போதையூட்டும் வேதி பொருள் உள்ளது எனவும், அதை ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். இதை, தொடர்ந்து பயன்படுத்தினால் மனநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


வனப்பகுதியில் கிடைக்கும் இந்த காளான்களை, விறகு எடுக்க செல்லும் பெண்களிடம் பணத்தை கொடுத்து போதை கும்பல் சேகரிப்பதாகவும், பின்னர் சுற்றுலா பயணியரிடம் ரூ.200 முதல் ரூ.2,000 வரையில் விற்பனை செய்வதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


தற்போது, கோடை சீசன் துவங்கியுள்ளதால் வெளிமாநில சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போதை காளான் விற்பனையை தடுக்க, சென்னை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, ஏ.டி.எஸ்.பி., சீனிவாச பெருமாள் தலைமையில், திண்டுக்கல், டி.எஸ்.பி., ஆனந்த், கோவை, சேலம் உட்பட, ஆறு மாவட்ட, டி.எஸ்.பி.,க்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 45 காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


இந்தக் குழுவினர் போதை காளான் விற்பனையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் வட்டக்கானல் செல்லும் வழியில், சோதனை சாவடி அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். 


--- போதை காளான் ---
வட்டக்கானல் பகுதியில் தங்கியிருந்த வெளிநாட்டினர், போதை தரும் காளானை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள், அதிகளவில் பயன்படுத்தியதால், அவர்களின் சொர்க்க பூமியாக, வட்டக்கானல் மாறியுள்ளது. தற்போது, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியருக்கு, ஆம்லெட், சாக்லெட், ப்ரூட் சாலட் மற்றும் உணவில், போதை காளான் கலந்தும் விற்கப்படுகிறது. அதற்காக தனி கட்டணமும் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.