தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுட வேண்டும்; அது தான் சாலை விபத்துகளை குறைப்பதற்கு பயனுள்ள நடவடிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சாலைவிபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கத்துடன்   மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் குறித்தும், அதன் விளைவாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது குறித்தும் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன. விபத்துகளுக்கு காரணமான மிகப்பெரிய ஓட்டையை அடைக்காமல், இது போன்ற தண்ணீர் நிரப்பும் முயற்சிகள் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்ற வினா எழுந்திருக்கிறது.


மோட்டார் வாகனச் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி விதி மீறல்களுக்கான கட்டணம்   20 மடங்குக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 1&ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள சட்டத்திருத்தத்தின்படி கடந்த காலங்களை விட மிக அதிக அளவில் அபராதம் வசூலிக்கப் பட்டு வருகிறது. தில்லியில் ரூ.15,000 மட்டுமே மதிப்புள்ள இரு சக்கர ஊர்திக்கு ரூ.23,000 அபராதம்  விதிக்கப்பட்டது, அதிகமாக சரக்கு ஏற்றி வந்த சரக்குந்துக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்படும் அபராதம் மிகவும் அதிகமாக இருப்பதால் அதை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. அதையேற்று பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள்  உள்ளிட்ட பல மாநிலங்களில் அபராதத் தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை குறைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாதுகாப்பான பயணம்; விபத்தில்லா பயணம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கமாகும். அதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அபராதமாக அதிகத் தொகையை விதிப்பது மக்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படும் என்றாலும் கூட, ஒரு சாலை விபத்து கூட நடக்கக் கூடாது என்ற இலக்கை எட்ட இந்த நடவடிக்கைகள் அவசியமாகும்.


அதேநேரத்தில் இந்த நடவடிக்கைகள் மட்டுமே சாலை விபத்துகளை குறைப்பதற்கு போதுமானதல்ல  என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. வாகனங்களில் அதிக சரக்குகளை ஏற்றுவதற்கு அபராதம் விதிப்பது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவதற்கும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதற்கும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட செயல்களால் எந்த அளவுக்கு சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் கட்டுப்படுத்தப்படுமோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான விபத்துகளையும், உயிரிழப்புகளையும் நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். சாலை  விபத்துகளை குறைப்பதற்காக அதை செய்ய மத்திய அரசு முன்வராதது ஏன்? என்பது தான் என் வினா.


தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த 3321 மதுக்கடைகளையும்,  தேசிய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும் பல ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி 2017&ஆம் ஆண்டில் மூட வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி. அதற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 604 மதுக்கடைகளை பா.ம.க. மூடியது. இதனால் தமிழகத்தில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும்  வெகுவாக குறைந்தன. இதன்மூலம் மதுக்கடைகளை மூடுவதன் மூலம் சாலைவிபத்துகளை குறைக்க முடியும் என்பது உறுதியாகிறது. இந்த உண்மை மத்திய அரசுக்கும் தெரியும். உண்மையாகவே சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், முதல் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறப்பதையாவது தடுத்திருக்க வேண்டும்.


ஆனால், மத்திய அரசு இரண்டையும் செய்யவில்லை. நாடு முழுவதும் 90,000 மதுக்கடைகளை மூட பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகப்பெரிய துணையாக இருந்ததே தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி குறிப்பிட்ட தொலைவுக்கு மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம்  மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்த கடிதம் தான். அதன் அடிப்படையில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க பெரும்பான்மையான மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போது, அதை மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாத அமைச்சகம், இப்போது மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்தி, அதன் மூலம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்கப்போவதாக கூறி வருகிறது.


மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு உண்மையாகவே விபத்துகளை கட்டுப்படுத்த  வேண்டும் என்ற அக்கறை இருந்தால், மோட்டார் வாகனச்  சட்டத்தை திருத்துவதில் காட்டிய வேகம் மற்றும் ஆர்வத்தை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதிலும் காட்ட வேண்டும். அது தான் சாலை விபத்துகளை குறைப்பதற்கு பயனுள்ள நடவடிக்கையாக அமையும்.