கேரள சட்டப்பேரவை சமீபத்தில் கூடியபோது முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டப்போவதாகவும், இது தொடர்பாகத் தமிழக அரசிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இது தமிழக நலனைக் காவு வாங்குவதாக உள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றமோ, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக, வலுவாக உள்ளதாகவும், வேறு புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும் ஏற்கெனவே கூறிய நிலையில் கேரள அரசு புதிய அணை குறித்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மத்திய அரசின் அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு, அணை பாதுகாப்பாக உள்ளதாக ஆய்வு செய்து கூறியபோதும் கேரள அரசு கேட்பதாக இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டு, உண்மைக்குப் புறம்பான எந்தத் தகவலையும் நம்ப வேண்டாம் என்றும், தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, முல்லைப் பெரியாறு அணையைக் கவனமாக இயக்கி வருவதாகவும் தெரிவித்தார். கேரள ஆளுநர் உரைக்குக் கண்டனம் தெரிவித்த அவர் உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசு மீறக்கூடாது என்றும், தமிழக அரசிடம் எதையும் திணிக்க முடியாது என்றும், இத்திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதாகவும், எந்த உரிமையையும் தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 



மேகதாது அணை பற்றிக் கூறிய அமைச்சர் துரைமுருகன், தமிழகத்தில் புதிதாக எந்த அணையும் கட்ட வாய்ப்பு இல்லை எனவும், கர்நாடக அரசு மேகதாதுவில் புதிதாக அணை (Mekedatu dam) கட்டி விடமுடியாது என்றும், அருகில் இருக்கும் புதுச்சேரி, தமிழக மாநிலத்தில் கருத்து கேட்ட பின்பு ஆட்சேபனை இல்லை என்றால் மட்டுமே மேகதாதுவில் அணை கட்ட முடியும் எனவும் தெரிவித்தார். 


மேலும் படிக்க |  முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; வதந்தியை நம்ப வேண்டாம்: அமைச்சர் துரைமுருகன்


இந்நிலையில் தற்போது மேகதாது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ.1000 கோடி நிதியை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளது. அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மத்தியில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி புது அணையைக் கட்ட முயன்று வருகிறது. இந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய சூழலில் தமிழகம் உள்ளது. மேகதாது அணை வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் குறுக்கு வழியில் செயல்படும் கர்நாடக அரசுக்குப் பாடம் புகட்ட தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


மேலும் படிக்க | மேகதாது அணை விவகாரத்தில் தமிழினத்திற்கு எதிரான போராட்டம் நடத்தும் காங்கிரஸ்: சீமான்


முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டவும்,  மேகதாதுவில் புதிதாக அணை கட்டவும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு பிரதமர் மோடியிடம் அதைச் சமர்ப்பித்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. 


மேலும் படிக்க: மகளிர் தினத்தில் இந்த ராசி பெண்கள் இதை செய்தால் அதிஷ்டம் நிச்சயம்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR