சட்டவிரோத மணல் குவாரி: தமிழ்நாடு உட்பட 5 மாநில அரசுகளுக்கு SC நோட்டீஸ்
சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் மத்திய அரசு, நடுவண் புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
புதுடெல்லி: சட்டவிரோத மணல் குவாரிகளை முறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் சட்டவிரோத செயல்பட்டு வரும் மணல் குவாரி மூலம் இயற்கை வளம் குறைந்தது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி செயல்பட்டு வரும் மணல் குவாரி முறைப்படுத்த வேண்டும் எனக்கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அழகர்சாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச் வழக்கை விசாரித்தது. நாடு முழுவதும் முறைகேடாக அனுமதியின்றி செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை குறித்து தகுந்த ஆதாரத்துடன் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு, ஆந்திர, பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிரா ஆகிய 5 மாநிலங்களுக்கும், மத்திய அரசு, வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மற்றும் நடுவண் புலனாய்வு பிரிவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.