உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும்: MK. ஸ்டாலின்
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கான மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கான மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஆங்கில மொழியில் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கம். இனி ஆங்கிலத்தோடு, ஹிந்தி, அஸாமீஸ், கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்பட உள்ளது. இதன்மூலம் உலகிலேயே தீர்ப்பு விவரங்களை ஐந்து மாநில மொழிகளிலும் வெளியிடும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைக்கும். ஒரு வாரத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கு, மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள் விரும்புவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இந்த நல்ல முயற்சியை மனதார வரவேற்கின்றேன்.
வழக்குகளைத் தொடுப்பவர்கள் மொழிப் பிரச்சினையின்றி - எந்தவிதக் குழப்பமும் சந்தேகமும் இல்லாமல், தீர்ப்புகளின் சாரம்சத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், வழக்கை நடத்திய தங்களது வழக்கறிஞர்கள் எடுத்து வைத்த வாதங்களையும், எதிர்த் தரப்பின் பிரதி வாதங்களையும் நன்கு தெரிந்து புரிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த முயற்சி இந்திய நீதி பரிபாலனச் சரித்திரத்தில் மிக முக்கிய மைல்கல் என்றே கருதுகின்றேன்.
இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம் - தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும். அதே வேளையில், தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது. ஆகவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
மேலும், தீர்ப்புகளின் மொழியாக்கத்தில், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மூத்ததும் – முதன்மையானதும் - இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்றுச் செழுமையானதுமான செம்மொழித் தமிழை, உச்ச நீதிமன்றம் தவிர்ப்பது, உலகத் தமிழர்கள் மற்றும் மேலை, கீழை நாடுகளின் தமிழறிஞர்களுக்குப் பல்வேறு அய்யப்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எனவே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களின் இந்த வரவேற்கத்தக்க சீரிய முயற்சியின் விளைவாகத் தமிழ் மொழியிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும்.
அந்த அரிய செயலைச் செய்து அவர் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற வேண்டுமென்று, ஏழரைக் கோடித் தமிழக மக்களும் விரும்புகிறார்கள். ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு மாண்புமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்புடன் வேண்டுகோள்” என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.