சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 24-ம் தேதி அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொலையாளியின் பெயர் ராம்குமார் என்றும், அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி இருந்ததும், சுவாதியை கொலை செய்து விட்டு அவர் தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்துக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை   இரவு 11 மணி அளவில் மீனாட்சிபுரத்துக்கு சென்று ராம்குமாரின் வீட்டை சுற்றிவளைத்தனர்.


போலீசார் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்த ராம்குமார், அவர்களிடம் சிக்கிக்கொள்வதற்கு முன்பு தற்கொலை செய்ய முடிவு செய்து பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சுதாரித்துக்கொண்ட போலீசார் பாய்ந்து சென்று, ராம்குமாரின் கழுத்தில் ஒரு துணியை சுற்றி, உடனடியாக அவரை மீனாட்சிபுரத்தில்  இருந்து செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.


அங்கு ராம்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். சரியான  நேரத்தில் போலீசார் ராம்குமாரை ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் ராம்குமாரை காப்பாற்ற முடிந்தது. அவருக்கு டாக்டர்கள் குழுவினர் 18 தையல்கள் போட்டனர். 2 மணி நேரம் இந்த சிகிச்சை  நடந்தது.


இந்த நிலையில் பிடிபட்ட ராம்குமாரிடம், சுவாதி கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தேவராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் காலை நெல்லை சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.