கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் - அரசிடம் வாள் சுழற்றும் கூட்டணி கட்சி
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான் குளத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
2 பேரின் நிலை தெரியவில்லை. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இந்த கோரச்சம்பவத்தினால் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இரவு நேரத்தில் 400 அடி ஆழத்திற்கு கீழே குவாரியில் கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ராட்சத பாறை சரிந்து உள்ளே விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளனர். விதிகளை மீறி இரவு நேரத்தில் கல்குவாரி செயல்பட்டதும், குறுகிய நில பரப்பில் சுமார் நானூறு அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டதுமே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகும். இதற்கு காரணமான குவாரி உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அளவு வரம்புமீறி செயல்பட்ட குவாரிகளை கனிமவள அதிகாரிகள் அனுமதித்தார்கள் என்பது குறித்து அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கு தமிழகம் முழுவதும் செயல்படும் குவாரிகளை ஆய்வு செய்து, சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல்படும் குவாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும் படிக்க | 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் ; கைதேர்ந்த கொள்ளையனின் பகீர் பின்னணி..!
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 10 லட்சமும், தொழிலாளர் நல வாரியம் மூலமாக ரூ. 5 லட்சமும் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்வர வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ரூ100ஐ தாண்டிய தக்காளி விலை - என்ன காரணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!