சென்னையின் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பலரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பி.எஸ்.பி.பி (PSBB) ஆசிரியர் ராஜகோபாலன் மீதான புகார் தொடர்பாக, அப்பள்ளியின் முதல்வரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பி.எஸ்.பி.பி (PSBB) ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்புகளில் தகாத முறையில் (Sexual Harassment Cases) நடந்துகொள்வதாக ஏற்கனவே மாணவர்கள் தரப்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், பள்ளி நிர்வாகம் அவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ALSO READ: தமிழக பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும்: அன்பில் மகேஷ்


இந்நிலையில் ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 


கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் இணைய வழியாக கடந்த சுமார் ஓராண்டாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்துவது குறித்தும் அதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்வதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (TN CM MK Stalin) தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் சட்டபூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும் மற்ற பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு பின்வரும் முடிவுகளையும், உத்தரவுகளையும்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். 


இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகள் அந்தந்த பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இப்பதிவினை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழுவால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும், இணைய வழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட பள்ளிக் கல்வித் துறை ஆணையர், கல்லூரி கல்வி இயக்குநர், கணினி குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு, மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும் இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டு நெறிமுறையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்றும்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது “போக்சோ” சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஒரு help line எண் உருவாக்கவும்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


மேலும், இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் காவல் பிரிவில் காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | PSBB பள்ளி முதல்வரிடம் மீண்டும் விசாரணை: நடவடிக்கை எடுக்காதது குறித்து காவல்துறை கேள்வி 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR