விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சி தலைமையிடமாகக் கொண்டு 2 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள், மூன்று காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், 3 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதியுடன் இன்று புதிய மாவட்டமாக உதயமாகிறது.


கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாக பணிகளை இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளும் இடம் பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக கிரண்குராலா நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் போலீஸ் சூப்பிரண்டாக ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார்.


புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஜ.ஜி சந்தோஷ்குமார் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 6 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள், 130 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர், ஊர்க்காவல் படையினர் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


புதிய கள்ளகுறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை இடம் பெற்றுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் கல்வராயன் மலைக்கு தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கிறார்கள்.