பதவி வெறி படுத்தும் பாடு, வாழ்க வசவாளர்கள்: டிடிவி தினகரன்
சசிகலா வருகையால் அதிமுக பதட்டம் அடைந்திருக்கிறது என்றும் பதவி ஆசையால் அக்கட்சி தலைவர்கள் வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறார்கள் என்றும் தினகரன் தொடர்ச்சியான தனது ட்வீட்களில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் தேர்தல் பரப்புரைகளும், குற்றச்சாட்டுகளும், புகார்களும், கேள்வி பதில்களும், விமர்சனங்களும், வசவுகளும் விண்ணைத் தொடும் அளவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் தோழி சசிகலா நான்கு ஆண்டு கால சிறைவாசம் முடித்து சென்னை திரும்பி விட்டார். எதிர்பார்த்தது போலவே அவரது வருகைக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் பல பதட்டங்கள் காணக்கிடைக்கின்றன.
அதிமுக-வை மீட்டெடுப்பதே தங்களது முக்கியமான நோக்கம் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் (TTV Dinakaran) கூறிக்கொண்டிருக்கும் நிலையில், டிடிவி தினகரனிடமிருந்து தன்னை காத்துக்கொள்ளுமாறு சசிகலாவுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.
“'அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். டிடிவி தினகரனை நம்பித்தான் சசிகலா கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்து விட்டுச் சென்றார். ஆனால் அவர் ஒரே மாதத்தில் அதை உடைத்துவிட்டார். நான் நிதானமாக பேசுகிறேனா என்று டிடிவி தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு 'ஊத்திக்' கொடுத்தார். அவரோட தொழிலே 'ஊத்திக்' கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள்.
ALSO READ: நேரடியாக விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வர மறுக்கிறார்: CM பழனிசாமி
கூவத்தூரில் எங்களுக்கு அவர்தான் ஊத்திக் கொடுத்தார். இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள். இனி ஒருபோதும் தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க முடியாது. அ.தி.மு.க. என்பது ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இனி ஒருபோதும் சசிகலாவின் (Sasikala) குடும்பத்தின் பிடியில் சிக்காது'' என்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சசிகலா வருகையால் அதிமுக பதட்டம் அடைந்திருக்கிறது என்றும் பதவி ஆசையால் அக்கட்சி தலைவர்கள் வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறார்கள் என்றும் தினகரன் தொடர்ச்சியான தனது ட்வீட்களில் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் பதவி படுத்தும் பாடு என்றும் ‘வாழ்க வசவாளர்கள்’ என்றும் அவர் மெலும் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.
முன்னதாக, சசிகலா சென்னை திரும்பிய அடுத்த நாளே, நகராட்சி நிர்வாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, செவ்வாயன்று, அதிமுக-அமமுக ஒன்றிணைவது சாத்தியம் என்பது போல் குறிப்புக்காட்டியுள்ளார். இரு கட்சிகளுக்கு இடையிலான போட்டியை ஒரு குடும்பத்திற்குள் தோன்றும் பிரச்சினைகள் போன்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கௌண்டர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சரிடமிருந்து வந்துள்ள இந்த அறிக்கை, அமமுக மற்றும் சசிகலா குறித்த அதிமுக நிலைப்பாடு குறித்து மீண்டும் ஒரு முறை கலவையான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது. கட்சியில் சசிகலா அல்லது டிடிவி தினகரனுக்கு இடமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) உறுதியாக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை இரவு வேலூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரைக் குறிப்பிட்டு, ஒரு குழு அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சசிகலாவின் வருகை பல மாற்றங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதிமுக-வில் இணையும் சசிகலாவின் கனவு நிஜமாகுமா, அல்லது, சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை என்ற முதல்வரின் நிலைப்பாடு நிலைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ALSO READ: சசிகலா வருகையால் சூடு பிடிக்கும் அரசியல் களம்... மிரட்டல் விடுக்கும் சசிகலா..!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR