ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊதிய உயர்வு உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த நவம்பர் 25-ஆம் நாள் அறிவித்தனர்.


சென்னை கீழ்பாக்கத்தில் கடந்த நவம்பர் 25-ஆம் நாள் நடைப்பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பான வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.


தற்போது கஜா புயலால் தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எவ்வாறு போராட்டம்... என அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு "டிசம்பர் 4-ஆம் தேதிக்கு முன்னர் முதல்வர் தங்களை அழைத்து பேசினால் போராட்டத்தை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்க தயாராக உள்ளோம்" என குறிப்பிட்டனர்.


மேலும், இந்த வேலைநிறுத்தத்தில் 14 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் ஊதியத்தை கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.


இந்நிலையில், தற்போது ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) அன்று தலைமைச் செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைத்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதித்துறை செயலாளர் சண்முகம் அவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.