Tamil Nadu Govt: குழந்தைகளுக்கு திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
பேரிடர் காலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கும். அதே நிலைமை, கொரோனா காலத்திலும் தொடர்வது வேதனையளிக்கிறது. இந்த அவலத்தை தடுப்பதற்காக தமிழக அரசு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது
சென்னை: குழந்தைத் திருமணம் என்பது ஒரு சாபக்கேடு. இந்த காலத்தில் குழந்தைத் திருமணம் நடக்கவேயில்லை என்று சொல்லிவிட முடியாது. இன்றைய நவீன காலகட்டத்திலும் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலை தருகிறது.
பொதுவாக, பேரிடர் காலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கும். அதே நிலைமை, கொரோனா காலத்திலும் தொடர்வது வேதனையளிக்கிறது.
கொரோனா என்ற வைரஸ் தொற்று மக்கள் மீது விடுத்திருக்கும் மாயுத்தத்தின் பக்கவிளைவாக குழந்தைத் திருமணங்கள் (Child Marriage) இருக்கப்போகிறது என ஐநா, யுனிசெஃப் (UNICEF) போன்ற சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. கொரோனா ஏற்படுத்தும் தாக்கத்தால், அடுத்த 10 ஆண்டுகளில் 1 கோடியே 30 லட்சம் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் என ஐநா எச்சரித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் நடைபெறும் திருமணங்கள் பலருக்கு தெரியாமல் போகும் சாத்தியங்கள் அதிகம். சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் குழந்தை திருமணம் நடைபெறுவது, அதை தடுத்து நிறுத்தியது போன்ற செய்திகள் வந்துள்ளன.
Also Read | கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள்
இதனையடுத்து, இந்த விஷயத்தில் கவனம் செலுத்திய தமிழக அரசு குழந்தை திருமணங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் தடுப்பது தொடர்பாக முக்கிய முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
“கோவிட்-19 (Covid-19) இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ( Minister of Social Welfare and Women's Rights) கீதாஜீவன் தலைமையில் அனைத்து மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சைல்டு லைன் 1098 அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அதுகுறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து சமூக பாதுகாப்புத் துறையும், சமூக நலத்துறையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கீதாஜீவன், குழந்தைகள் திருமணம் (Child Marriage) செய்து வைப்பவர்கள் மற்றும் அந்தக் குழந்தைகள் திருமணத்தில் கலந்து கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இக்கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிகர், சமூக நல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் கவிதாராமு மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Also Read | கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – தமிழக அரசு
குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்ட விரோதமானது. குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்துபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் 12 வது பிரிவின் கீழ் குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் மற்றும் அனுமதிக்கும் நபர்களுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது.
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும்.
1891 ஜனவரியில் பிரிட்டிஷ் அரசால் முன்வைக்கப்பட்ட சட்ட வரைவு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 என்றும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 14 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பிறகு காலத்திற்கு ஏற்ப, 1978ல் இந்த சட்டம் திருத்தப்பட்டு, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு 18 என்றும் மாற்றப்பட்டது. 2006ல் குழந்தை திருமண தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது, மேலும் சில புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டன.
Also Read | கொரோனா மரணம்: 2 ஆண்டுகளுக்கு ESIC, EPFOவில் சிறப்புச் சலுகை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR