இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் எங்களுக்கு தொடர்பு எதுவும் இல்லை மேலும் தமிழக அரசியல்வாதிகள் வதந்தி பரப்புகின்றனர் என லைக்கா நிறுவனம் சாடியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை வவுனியாவில் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை மூலமாக ஈழத் தமிழருக்கு 150 வீடுகள் ஒப்படடக்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.


ஆனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினியின் இலங்கை பயணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் தமது பயணத்தை ரத்து செய்வதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.


இதனைத் தொடர்ந்து இன்று லைக்கா நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக அரசியல் தலைவர்களின் பொய்களை நம்பி ரஜினிகாந்த் தமது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளார்.


எங்களுக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு என்பது வதந்தி. இத்தகைய பொய்களை தொழில் போட்டியாளர்களும் சிலரும் பரப்பி வருகின்றனர். தமிழக அரசியல்வாதிகளும் வதந்திகளை பரப்புவதாக சந்தேகம் உள்ளது.


போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்களது திட்டத்தில் எந்த ஒரு அரசியல் நோக்கமும் கிடையாது. போரால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுகிறோம். ரஜினியின் வருகையின் போது மேலும் பல திட்டங்களை அறிவிக்க இருந்தோம். ஏப்ரல் 9-ம் தேதி திட்டமிட்டபடி வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாறு லைக்கா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.