தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3 ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. 7 ஆம் தேதி சீருடை வழங்கப்படுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுமார் 35,414 தொடக்கப்பள்ளிகள், 9 ஆயிரத்து 708 நடுநிலைப்பள்ளிகள், 17,000 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு கடந்த மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 10 நாட்களுக்கு முன்கூட்டியே இந்த ஆண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 


இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை எழுந்துள்ளது. வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டதால், கோடைவிடுமுறை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்றும், ஜூன் 3 ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


மேலும், மாணவர்களுக்கு பாடத்திட்டம் அதிகம் இருப்பதால், திட்டமிட்டபடி ஜூன் 3 ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். அன்றைய தினம் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்படும். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சீருடை ஜூன் 7 ஆம் தேதி அன்று மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் மற்ற விலையில்லா கல்வி உபகரணங்களும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.