தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாரபட்சம் இல்லாமல், கொரோனா அனைவரையும் தன் பிடியில் சிக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.
சென்னை: இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக வீசி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
பாரபட்சம் இல்லாமல், கொரோனா அனைவரையும் தன் பிடியில் சிக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் மே ஏழாம் தேதி அவர் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
முன்னதாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடல்நல பாதிப்பால் அமைச்சரவை கூட்டத்தில் 2 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளசெய்தியை தனது ட்விட்டர் பதிவு மூலம் பகிர்ந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், "எனக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆகையால், நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் மிக அதிகமாக உள்ளது. வயது வரம்பு இல்லாமல் இந்த தொற்று அனைவரையும் பாதித்து வருகின்றது. சமீப காலங்களில் பொது மக்கள், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் பல பிரமுகர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத துவக்கத்தில் நடந்தது. இதை முன்னிட்டு நடந்த தேர்தல் பரப்புரைகளில் மக்கள் கூட்டமும் அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக தொற்றின் அளவு தேர்தலுக்குப் பிறகு அதிகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல், தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தின் ஒற்றை நாள் தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. தொற்றின் பரவலைத் தடுக்க, பல வித கட்டுப்பாடுகள் அரசு சார்பில் அவ்வப்போது விதிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தமிழகத்தில் இன்று தொடங்கி மே 24 வரை முழு உரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வாங்கப்பட்டு வருகின்றது.
நேற்று மட்டும் தமிழகத்தில் 28,897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 236 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 7,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா பரிசோதனையைப் பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,53,790 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
ALSO READ: Total Curfew in Tamil Nadu: இன்று முதல் லாக்டவுன், எவை இயங்கும்? கட்டுப்பாடுகள் என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR