இலங்கையில் தமிழ் தேசியகீதம் புறக்கணிப்பு -PMK கண்டனம்!
இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழ் புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது, இதற்கு தனித் தமிழீழம் தான் தீர்வு என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழ் புறக்கணிப்பு கண்டிக்கத்தக்கது, இதற்கு தனித் தமிழீழம் தான் தீர்வு என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., இலங்கையில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் அந்த நாட்டின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிரானது ஆகும்.
‘‘ஸ்ரீலங்காத் தாயே’’ என்று தொடங்கும் இலங்கை தேசிய கீதத்தின் தமிழ் வடிவத்திற்கு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இதற்காக அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது அட்டவணையில் தமிழ் வடிவ தேசிய கீதம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்தகைய தேசிய கீதம் இலங்கையின் விடுதலை நாள் விழாவில் இசைக்கப்படாது என்பது அந்நாட்டு ஆட்சியாளர்களின் சிங்கள இனவெறியை வெளிப்படுத்தும் செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பல மொழிகள் பேசப்பட்டாலும் ஒற்றை மொழியில் தான் தேசிய கீதம் இசைக்கப்படுவதாகவும், அதே வழக்கத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் தான் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்படுவதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. இது அபத்தமான வாதம் ஆகும். உலகில் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் அங்கு பேசப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தேசியகீதம் இசைக்கப் படுகிறது. அதேபோல், சிங்கப்பூரில் 75% சீனர்கள் வாழும் போதிலும் சீன மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை; மாறாக, சிறுபான்மை மொழியான மலாய் மொழியில் தான் இசைக்கப்படுகிறது.
இந்தியாவிலும் தேசிய கீதம் பெரும்பான்மை மொழியான இந்தியில் இசைக்கப்படுவதில்லை; மாறாக சிறுபான்மை வங்க மொழியில் தான் இசைக்கப்படுகிறது. இவற்றைக் கடந்து நாட்டை ஒருங்கிணைக்கும் கருவியாக தமிழ் தேசிய கீதம் கருதப்படும் நிலையில், அதை நீக்குவது இனவெறியின் உச்சமாகும்.
1948-ஆம் ஆண்டு இலங்கை விடுதலை அடைந்த நிலையில், 1949-ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது விடுதலை நாள் விழாவில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழிலும், சிங்களர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களத்திலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. 2009-ஆம் ஆண்டு இலங்கைப் போர் முடிவடைந்த பிறகு 2011-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் எந்தப் பகுதியில் நடைபெறும் விடுதலை நாள் விழாவாக இருந்தாலும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்று 2010-ஆம் ஆண்டு மகிந்த இராஜபக்சே அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் அறிவித்தது. அதன்பின் 5 ஆண்டுகள் நீடித்த தடை, தமிழர் கட்சிகளின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேனா அரசு பதவியேற்றவுடன் அகற்றப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நடந்த விடுதலை நாள் விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தமிழ் தேசிய கீதத்திற்கான தடையை அகற்றிய சிறிசேனா இலங்கையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது தமிழர்களை சமாதானப்படுத்துவதற்கான முயற்சி என்றும் கூறியிருந்தார். இலங்கையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் முந்தைய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை இன்றைய அரசு ரத்து செய்கிறது என்றால், தங்களுக்கு வாக்களித்த பெரும்பான்மை சிங்களர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக சிறுபான்மை தமிழர்களை பல வழிகளில் அவமதிக்கவும், கொடுமைப்படுத்தவும் கோத்தபாய அரசு தயாராகிவிட்டது என்பது தான் பொருளாகும்.
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற பிறகு பல்வேறு தருணங்களில் தமது அரசின் கொள்கைகள் குறித்து பேசிய அதிபர் கோத்தபாய, இலங்கையில் பெரும்பான்மை சிங்களர்களின் விருப்பங்களுக்கு மாறாக தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார். இந்தியா- இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் செய்யப்பட்ட 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழும் இலங்கையின் தேசிய, அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். ஆனால், தமிழில் தேசிய கீதம் பாட தடை விதித்திருப்பதன் மூலம், 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை மதிக்க மாட்டோம் என்று இலங்கை சொல்லாமல் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே, தமிழர்கள் இலங்கையில் மூன்றாம் தர குடிமக்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும், போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர். இவற்றை வைத்து பார்க்கும் போது இலங்கையில் சிங்களர்களுடன் இணைந்து தமிழர்கள் கண்ணியமாக வாழ்வதற்கு சிறிதும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.
இத்தகைய சூழலில் தமிழர்கள் அவர்களின் தாயகமான ஈழத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வகை செய்வது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தமிழீழம் அமைத்துத் தர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.