சென்னை: தமிழ் மொழி அறியாதவர்களை பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள உத்தரவை கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டத்தை கனரா வங்கி எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, பெல் மற்றும் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டு இளைஞர்களைப் புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.


திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர் உள்ளிட்ட ‘குரூப் டி’ பணி இடங்களுக்கு, ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு செய்துள்ள 528 பணியாளர்களுள், 475 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; தமிழ்நாட்டு இளைஞர்கள் 53 பேர் மட்டுமே வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். மதுரை ரயில்வே கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேர்களுள், வெறும் 11 பேர் மட்டுமே, தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர்.


தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்வு செய்துள்ள 300 உதவிப் பொறியாளர்களுள், 36 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் கூறுகிறார்.


தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவில் நீதிபதி பணிக்கு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தேர்வு எழுதலாம் எனக் குறிப்பிட்டு இருக்கின்றது. இதன் மூலம் தமிழே தெரியாத வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியில் சேர்வதற்கு, அடிமை எடப்பாடி அரசு வழி செய்து இருக்கின்றது.


இப்போது, இரயில்வே துறையைப் போன்று, மத்திய அரசு வங்கிப் பணியாளர் தேர்வுகளிலும், வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நுழையும் படலம் தொடங்கி இருக்கின்றது.


பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில், எழுத்தர் எனப்படும் (Single Window Operator-SWO) பணி இடங்களில் 464 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர்.


வங்கித்துறையில் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணி இடங்களுக்கு இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், வங்கி உதவியாளர், எழுத்தர் போன்ற பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் விதிமுறை. 


இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள எழுத்தர் பணி இடங்களுக்கு, தமிழே தெரியாதவர்களைத் தேர்வு செய்து இருப்பது கண்டனத்திற்குரியதாகும். இதனால், தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டு இருக்கின்றது.


இந்தியா முழுவதும் வங்கிப் பணிகளில், அந்தந்த மாநில மொழிகளைப் பேசத் தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்வது என்ற நடைமுறையில், தமிழ்நாட்டில் படித்தவர்கள் வேலைவாய்ப்புப் பெற்று வந்தனர். இதனை மாற்றி, வெளிமாநிலத்தவரைத் தேர்வு செய்வது, வங்கிக்கு வருகின்ற பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும் இவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டால், தமிழ்நாட்டு வங்கிகளில் மீண்டும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு விடும். வங்கிப் பணிகள் பாதிக்கப்படும்.


தமிழ் மொழி அறியாதவர்களை, மொழி அறிவு இருப்பதாக தகிடுதத்தம் செய்து, கனரா வங்கியில் எழுத்தர் பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள உத்தரவை, கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டில் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டத்தை கனரா வங்கி எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.


இவ்வாறு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.