தமிழக பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வெளியாகியுள்ள சூப்பர் அறிவிப்புகள்!
Tamil Nadu State Budget 2024: தமிழக அரசின் 2024 - 25ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
மிகவும் எதிர்பாக்கப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு துறைக்கும் நிறைய அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக இளைஞர்களுக்கு நிறைய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் வரும் நிதியாண்டில் 101 கோடி ரூபாய் அளவிற்கு மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் அவர்களுக்குரிய தொகை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய மின்னணு வர்த்தக வரவுகள் தள்ளுபடி (TReDS) தளத்தில் பெரும்பான்மையான பொதுத்துறை நிறுவனங்களும் இணைவது உறுதி செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க | TN Budget 2024: தமிழக பட்ஜெட்டில் வெளியாகிய முக்கிய அறிவிப்புகள்!
தொழிற்துறை பெண்களின் வேலைவாய்ப்பு
தொழிற்துறைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிக பங்களிப்பை கொண்டிருப்பதும், மாநிலத்தின் தொழிற் சூழலமைப்பின் பாலினப் பன்முகத் தன்மையும் முற்போக்கான முதலீட்டாளர்கள் பலரை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கின்றன. இதனை உணர்ந்து, இவற்றை மேலும் உயர்த்திடவும், பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதை மேலும் அதிகரிக்கவும், ஒரு சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
தமிழ்நாட்டைச் சார்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் போன்ற 500 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மகப்பேறு, திருமணம் போன்ற பல காரணங்களினால் பணியில் இடைநிற்க நேரிட்டு, மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்குத் தேவையான தனித்திறன் பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
தஞ்சையில் வேலைவாய்ப்பு
தஞ்சை மண்டலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 300 ஏக்கர் நிலப் பரப்பளவில் சிப்காட் நிறுவனம் ஒரு புதிய தொழிற்பூங்காவை அமைக்கும். இந்தப் புதிய பூங்காவில் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், தோல் அல்லாத காலணிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத தொழில்கள் அமைக்க உரிய முயற்சிகள் எடுக்கப்படும். நல்ல தரமான வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற்றிடும் வகையில், அவர்களின் திறனை உயர்த்திட 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை “தொழில் 4.0" தரநிலைக்கு உயர்த்தி, 2,877 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்திறன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இளைஞர் திருவிழாக்கள்
தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆற்றலையும் அறிவுத்திறனையும் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் மெருகேற்றி, தரணி போற்றிடும் சாதனையாளர்களாக உருவாக்கிட முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடெங்கும் நடத்தப்படும். இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பேச்சு, பாட்டு, இசை, நடனம் போன்ற பன்முகப் போட்டிகள் நடத்தப்படும். மேலும், கிரிக்கெட், கையுந்து பந்து, கால்பந்து, இறகுப்பந்து, சிலம்பம் என 33 விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் அடங்கிய கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கப்பட உள்ளது.
கல்விக்கடன்
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கிடவும், அவர்தம் பெற்றோரின் நிதிச்சுமையைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், தேவையின் அடிப்படையில் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2,500 கோடி ரூபாய் அளவிற்கு, பல்வேறு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கிடுவதை அரசு உறுதி செய்திடும். தமிழ்நாட்டில் பரவலாக கல்லூரிகளில் திறன் பயிற்சிக் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் (Skill Labs) உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நான் முதல்வன்
உலகை வெல்லும் இளைய தமிழகத்தைப் படைக்கும் உயரிய நோக்கத்தோடு நான் முதல்வன் திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். தனிச்சிறப்பு மிக்க இத்திட்டத்தில் இதுவரை சுமார் 28 இலட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 18 ஆயிரம் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும், 20,000 கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 1.19 இலட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Tn budget: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ