POCSO வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் - தமிழக முதல்வர்!
பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தமிழகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என சேலம் எடப்பாடியில் புதிய நீதிமன்ற திறப்பு விழாவில், முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தமிழகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என சேலம் எடப்பாடியில் புதிய நீதிமன்ற திறப்பு விழாவில், முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், ‘எடப்பாடியில் புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டதன் மூலம் விரைவில் நீதி கிடைக்க வழிவகை ஏற்படும். நீதிமன்றங்களை கணினி மயமாக்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்., உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். நீதியரசர்களும், ஆசிரியர்களும் இறைவனுக்கு சமமானவர்கள்’ என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் குவிந்துள்ள நிலையில், POCSO வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தற்போது தமிழக முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக POCSO சட்டத்தின் கீழ் பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்குவதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் 60 நாள் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. இதுபோன்ற நீதிமன்றங்களை உருவாக்க, நீதிபதிகளை நியமித்தல், உதவி ஊழியர்கள் மற்றும் சிறப்பு வழக்குரைஞர்களை நியமிக்க நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.