கட்சியின் விசுவாசிகளுக்கே உரிய விலாசம் கிடைக்கும் -EPS!
கொள்கைப் பிடிப்பு இல்லாத ஒரு அரசியல் வியாபாரி தான் செந்தில் பாலாஜி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
கொள்கைப் பிடிப்பு இல்லாத ஒரு அரசியல் வியாபாரி தான் செந்தில் பாலாஜி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
அதிமுக-வில் இருந்து பிளவுப்பட்ட அமமுக-வில் இருந்து விலகி, தற்போது திமுக-வில் இணைந்திருக்கும் செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி என்றும், கொள்கைப் பிடிப்பு இல்லாத ஒரு அரசியல் வியாபாரி என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மாற்றுக் கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக-வில் இணைந்த செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி என கடுமையாக சாடினார்.
அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்திருப்பது, அதிமுக என்ற குடும்பத்தின் பாசப் பிணைப்பை காட்டுகிறது என குறிப்பிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களின் இயக்கமான அதிமுக-விற்கு வந்தவர்களுக்கு என்றும் மரியாதை அளிக்கப்படும் என தெரிவித்தார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் விசுவாசத்துடன் இருந்ததால்தான் தங்களுக்கு உரிய விலாசம் கிடைத்திருப்பதாகவும் அவர் இத்தருணத்தில் குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசிய அவர்... செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி, கொள்கைப் பிடிப்பு இல்லாத ஒரு அரசியல் வியாபாரி எனவும் சாடினார்.
இன்று நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.