நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்திவருகிறது. இது சோனியா காந்தியை அலைக்கழிக்கும் செயல் எனக் கூறியும், இதைக் கண்டித்தும் இன்று (ஜூலை.26) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகேயும் போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அமலாக்கத் துறைக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கடுமையான கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக விசாரணைக்கு அழைத்து இருக்கிறார்கள். இது ஜனநாயக ரீதியாக, சட்டரீதியாக, தார்மீக ரீதியாக தவறு என்பது எங்கள் கருத்து.



இன்றைக்கு மோடி அரிசி, தயிர், பால் என அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறார். மக்கள் கஷ்டப்படும்போது அரிசியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற திட்டம் நாட்டில் வந்தது. அண்ணா தான் முதல்முறையாக அரிசி விலையை குறைத்தார். தற்போது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு மோடி ஜிஎஸ்டி வரி விதிக்கிறார். இதனால் அரிசி விலை அதிகரிக்கும். இது கொடுமையான விஷயம்.


இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரவுபதி பதவி ஏற்றிருக்கிறார். சீதை பதவியேற்றால் வரவேற்று இருக்கலாம். திரவுபதி பதவி ஏற்று இருக்கிறார். தப்பில்லை. சீதையை நாம் வணங்குகிறோம். அவர்கள் திரவுபதியை வணங்குகிறார்கள். தவறாக நான் எதுவும் சொல்லவில்லை. ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த அவர் நியமனத்தை வரவேற்கிறோம். ஆனால் அவருடைய பதவி ஏற்பு விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உரிய மரியாதை, சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டிய இருக்கை வழங்கப்படவில்லை. இது எப்படி நியாயமாகும். அதனால் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் நடைமுறையை மீறுகிறீர்கள் என அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இது திட்டமிட்டு செய்த செயல். அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு கண்டனம் எழுதியிருக்கிறார்கள்.



தமிழகத்தில் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் ஆளுநர் வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார். அவர் திராவிடத்தை பற்றியும், சனாதனத்தை பற்றியும் பேசுகிறார். அது அவருடைய பணி அல்ல. ஆளுநர் மாநிலத்தில் நடைபெறும் விஷயங்களை கவனிக்க வேண்டும்.


அதில் அவருக்கு மாற்றுக் கருத்து இருந்தால் முதல்வரை அழைத்து கருத்து சொல்ல வேண்டும். முதல்வரை தவிர்த்து வேறு யாரோடும் அவர் கருத்து பரிமாற்றம் செய்யக்கூடாது. அதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை. பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் செல்கிறார். இது தமிழக அரசுக்கு தெரியவில்லை. ஆளுநர் மத்திய அமைச்சரை பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்கிறார். அது உயர் கல்வித் துறை அமைச்சருக்கு தெரியவில்லை. தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு தெரியாமல் ஒரு ஆளுநர் செயல்படுவது. நியாயமா? மோடியால் இதற்கு பதில் சொல்ல முடியுமா? இது தவறான விஷயம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை நீங்கள் நசுக்குகிறீர்கள்.


மேலும் படிக்க | கருணாநிதிக்கு பேனா சிலை... வாழ்வாதாரத்தை பாதிக்கும்


மாநில முதல்வரைவிட ஆளுநர் உயர்ந்த அதிகாரம் மிக்கவர் என்று கருதுகிறீர்கள். ஆனால் இந்திய ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்தான் அதிகாரம் உடையவர். நியமிக்கப்படுகின்ற ஆளுநர் ஒரு பார்வையாளர்.அதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.


முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் வங்காள விரிகுடா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதில் எந்த தவறும் இல்லை. தமிழ் சமூகத்தில் மக்களை தட்டி எழுப்பிய வலிமையான தலைவர். ரூ.3,000 கோடிக்கு சிலையை வைத்தவர்கள்தான் இது தவறு என்று குறை சொல்கிறார்கள். இது பொறாமையில் சொல்லப்படும் கருத்துகள்.


ஆளுநர் ரவியை ஆதரித்து தமிழிசை பேசுவதில் வியப்பில்லை. அவரும் ஓர் ஆளுநர். இவரும் ஓர் ஆளுநர். புதிய கல்விக் கொள்கையை பற்றி கல்வியாளர்கள் பேசலாம். அல்லது பாஜக கொள்கை பரப்பு செயலாளர்கள் பேசலாம். ஆனால் ஆளுநர் அதை ஒரு வழக்கமாக வைத்துக்கொண்டு சிறந்த கல்விக் கொள்கை என பேசுவது தவறு. பல மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கை ஏற்கப்படவில்லை. இது மேலோட்டமாக பார்த்தால் சரியாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு பொருந்தாது.


மேலும் படிக்க | கைதிகள் கையில் புத்தகம் - சின்னமனூர் காவல்நிலையத்தில் அசாத்திய முயற்சி


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓர் ஊசி வெடி மாதிரி. ஒரு வெடியை கொளுத்தி போட்டு விடுவார். அவ்வளவு தான். அது வெடிக்குதா, வெடிக்கலையா என்று கூட பார்க்க மாட்டார். இதுவரை எவ்வளவு குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார். ஒன்றைக் கூட அவர் நிரூபிக்கவில்லை. நிரூபிப்பதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. அதன் பிறகு அதைப் பற்றி அவர் பேசுவதும் இல்லை” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ