கருணாநிதிக்கு பேனா சிலை... வாழ்வாதாரத்தை பாதிக்கும்

கலைஞர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்றூ பூவலகின் நண்பர்கள் எச்சரித்துள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 26, 2022, 06:38 PM IST
  • கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படவிருக்கிறது
  • பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்
  • மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று எச்சரிக்கை
கருணாநிதிக்கு பேனா சிலை... வாழ்வாதாரத்தை பாதிக்கும் title=

இதுகுறித்து பூவலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தமிழ் இலக்கியப் பணிகளை போற்றும் வகையில் கலைஞர் நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு  கடலோர  மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 20.06.2022 அன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவிடம் அமைந்துள்ள இடத்திற்குப் பிற்பகுதியில் கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா வடிவ சிலை அமைப்பதற்காக CRZ அனுமதிகோரி சமர்ப்பித்திருந்த  விண்ணப்பத்தை  தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்தை கலைஞர் நினைவிடத்தில் இருந்து சென்றடையும் வகையில் 290மீ தூரத்திற்கு கடற்கரை, 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011ன் படி பகுதி IV(A) என வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பிரதமரின் சென்னை வருகை - விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

15.02.2015 கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011ல் அறிவிக்கையில் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திருத்தத்தின்படி CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் (Exceptional cases) மட்டுமே நினைவிடங்கள்/நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியும் கூட பல்வேறு நிபந்தனைகளுடன் மட்டுமே வழங்கப்படும். இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் அவசரகால செயல்திட்டம் தயாரித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திய பின்னரே அனுமதி பெற முடியும்.

CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் (Exceptional cases) மட்டுமே நினைவிடங்கள்/நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கலைஞரின் நினைவாக அமைக்கப்படும் இந்த பேனா வடிவ சிலை Exceptional case இல்லை. ஏற்கனவே நினைவிடம் அமைந்திருக்கும் வளாகத்திற்குள்ளாகவே பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கு போதுமான இடமிருக்கின்ற நிலையில் கடலுக்குள் அமைப்பதை Exceptional case என்று கூற முடியாது.

மேலும் மெரினா கடற்கரை தொடர்ச்சியாக பல்வேறு மாறுதலுக்குட்பட்டு வருகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் சென்னையை ஒட்டி கடலுக்குள் எழுப்பப்பட்ட துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களால் மெரினா கடற்கரையில் அதிகமாக மணல் சேர்ந்து (Accretion) வருகிறது. ஒன்றிய புவி அறிவியல் துறை வெளியிட்ட ”National Assessment of Shoreline Changes along Indian Coast” என்கிற ஆய்வறிக்கையில்(பக் 40) சென்னையில் குறிப்பாக மெரினா கடற்கரையில் அதிகமாக மணல் சேர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் மெரினாவை ஒட்டிய கடலுக்குள் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை அமைத்தால் இன்னும் சில பத்தாண்டுகளுக்குப் பின்பாக அக்கட்டுமானம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.

மேலும் படிக்க | மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க அன்பில் மகேஷ் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்!

இத்திட்டம் குறித்து மீனவ சங்கங்கள் எழுப்பியுள்ள சில விஷயங்களையும் அரசு தீவிர கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ஊரூர்குப்பம் மீன்பிடிப்போர் கூட்டுறவு சங்கமானது மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு இத்திட்டத்தை அரசு கைவிடக்கோரி கடிதம் எழுதியுள்ளது. அதில்  ”கடலிலும், கடற்கரையிலும் திட்டங்களை கொண்டுவரும் போது அந்தந்த மாவட்டங்களில் மீனவர்களுக்கு பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதனை அறிந்து கொள்ளவே கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 பத்தி 6(c) ல் மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை குழுமத்தில்(DCZMA) மூன்று மீனவ பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

ஆனால் 21 வருடங்கள் ஆகியும் DCZMA ல் மீனவ பிரதிநிதிகள் ஒருவர் கூட கிடையாது. மீனவ பிரதிநிதிகள் இல்லாமலேயே கடலிலும், கடற்கரையிலும் அரசால் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களின் மீன்பிடி தகவல்களை அரசு முறையாக கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்யாமல் கடல் நடுவே முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்ன திட்டத்தை அமைத்தால் கரைத்தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் இந்த திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், மீனவர்களின் மீன்பிடி இடங்களை சட்டத்தில் கூறியுள்ள படி TNSCZMP ல் பதிவு செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளனர். இச்சங்கம் கூறியதுபோல அருகாமைக் கடற்கரையில் இப்படியான திட்டங்களை செயல்படுத்துவது மீனவர்களின் வாழ்வாதாரத்த்தில் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியது. தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக சிந்திக்கும் நம் அனைவரின் சிந்தனைகளிலும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் வாழும் தலைவர் கருணாநிதி. அப்படி ஒரு தலைவரின் பெருமையை கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைத்துத்தான் போற்ற வேண்டும் என்பதில்லை. மாறாக மதுரையில் அமைக்கப்பட்டு வரும் ”கலைஞர் நினைவு நூலகம்” போன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் கருணாநிதியின் நினைவைப் போற்றலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News