கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை மாற்றி தற்போது, தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பிற்கு வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த அறிவிப்பை திரும்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைவைத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்., “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பினால் தமிழக வழக்கறிஞர்கள் புறக்கணிப்பட்டு, தமிழ் தெரியாத இதர மாநிலத்தவர்களும் பணியில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.


தமிழ்மொழி தெரியாதவர்களை கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது பல்வேறு உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணனாது ஆகும். தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது நீதிபரிபாலனத்தில் பல்வேறு சிரமங்களை மக்களுக்கு ஏற்படுத்தும்.


கீழமை நீதிமன்ற கட்டமைப்பை சிதைக்கும் விதமாகவும், நீதிபரிபாலன முறையில் மக்களை அந்நியப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நீதிமன்ற நடவடிக்கைகளில் அனைத்து மட்டங்களிலும் தமிழ்மொழியை முழுமையாக வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என சிபிஐ(எம்) உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் குரலெழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழை புறக்கணிக்கிற நடவடிக்கையாக அமைந்துள்ளது.எனவே இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென்றும்; ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழை உள்ளடக்கிய தேர்வை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.