குறிப்பிட்ட பிரிவினரின் பெருமையை மீட்டெடுத்த tnGovt -PMK!
6 பட்டியலினத்தவரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்!
6 பட்டியலினத்தவரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"தமிழ்நாட்டில் பட்டியலினங்களில் இடம் பெற்றுள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய மூத்த இ.ஆ.ப. அதிகாரி தலைமையில் குழு அமைத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பெருமையை மீட்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யக்கோரும் 6 பிரிவினரின் கலாச்சார மற்றும் பூர்வீக வரலாறுகளை அறிந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஆதி திராவிடர் நல இயக்குநர் உறுப்பினர் & செயலராகவும் இடம் பெற்றுள்ளனர். இக்குழு சம்பந்தப்பட்ட மக்களிடம் ஆலோசனை நடத்தியும், பழங்கால வரலாறு குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தும் இந்த கோரிக்கைகளை ஏற்பது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டியலினத்தில் உள்ள 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது. அச்சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் என்னையும் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தனர். ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவினர் தங்களைக் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட பெயரில் தான் தங்களை அழைக்க வேண்டும் என்று கோரினால், அதை ஆய்வு செய்து, கடந்த கால ஆவணங்களை சரிபார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். தமிழக முதலமைச்சரும் இப்போது கிட்டத்தட்ட அதேமாதிரியான நிலைப்பாட்டை எடுத்திருப்பது மிகவும் சரியானது; பாராட்டத்தக்கது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சி தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களுக்கு முக்கியப் பதவிகளை வழங்கி வருகிறது. இப்போதும் கூட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் வகித்து வருகிறார். மருதநிலத்து மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்று 1994-ஆம் ஆண்டு பரமக்குடியில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதன்பின் 2012-ஆம் ஆண்டும் இதே கோரிக்கையை தமிழக அரசிடம் பா.ம.க. வலியுறுத்தியது. அதன்பிறகும் இந்தக் கோரிக்கைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதை தேவேந்திரகுல வேளாள மக்களே நன்கு அறிவார்கள்.
அதுமட்டுமின்றி, பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தை தூய்மைப்படுத்தி அவரது நினைவு நாளை சிறப்பாக கொண்டாடியது பாட்டாளி மக்கள் கட்சி தான். தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாள மக்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் மோதல் ஏற்படும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட சமுதாயத் தலைவர்களை சந்தித்து அமைதி ஏற்படுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே.
குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய ஆறு பிரிவினரும் நீண்ட காலமாகவே தங்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரிலேயே அழைத்து வருகின்றனர். குடும்பன் முதல் பள்ளன் வரையிலான 6 சமூகப் பிரிவினரும் அடிப்படையில் வேளாண்மையை தொழிலாகக் கொண்டவர்கள்; மருதநிலத்தின் பூர்வகுடி மக்கள் என்று அச்சமுதாயப் பெரியவர்கள் கூறுகின்றனர். ஆங்கிலேயர் காலத்திலேயே தங்களைப் பட்டியலினத்தில் சேர்க்க தேவேந்திரகுல வேளாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதையும் மீறி அவர்கள் அப்பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
குடும்பன் என்றால் மருத நிலத்தில் வேளாண்ணை செய்து குடும்பம் அமைத்தவர் என்று பொருளாகும். வேளாண்மை செய்தவர்களே வேளாளர்கள் ஆனார்கள். மருதநில மன்னன் தேவேந்திரன் என்பதால் அப்பகுதியில் விவசாயம் செய்தவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் ஆனார்கள். பள்ளம் என்றால் பண்படுத்தப்பட்ட விளைநிலம். அதில் விவசாயம் செய்தவர்கள் பள்ளர்கள் ஆனார்கள். தமிழ்நாட்டில் மருத நிலம் தான் ஐந்துவகை நிலங்களில் கடைசி என்பதால் அங்கு வசிப்பவர்கள் கடையர்கள் ஆனார்கள். குடும்பத் தலைவன் குடும்பனின் கட்டளையை நிறைவேற்றும் செயலாளர் காலாடி என அழைக்கப்பட்டார். பண்ணைகளில் பணியாற்றுபவர்கள் பண்ணையாடி என்றும் பின்னாளில் பண்ணாடி என்றும் ஆனார்கள்.
இவ்வாறாக தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதே தங்களின் அடையாளம் என சம்பந்தப்பட்ட 6 சமூகப் பிரிவினரும் கருதுவதால், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே சரியானதாக இருக்கும். எனவே, குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று, தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.