ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா மிகவும் பிரபலாமானது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மனிதர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செய்வதினைப் போல் கால்நடைகளும் இந்த நிகழ்வில் பங்கேற்கும்.


விழாவில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு தீக்குண்டம் வளர்க்கப்டும். பின்னர் படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அம்மனை அழைத்து வரம்கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சருகுமாரியம்மன் உற்சவ சுவாமி குண்டத்துக்கு அழைத்து வரப்படும். 


பிரசித்திப்பெற்ற பங்குனி மாத குண்டத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித்தல் இன்று அதிகாலை தொடங்கியது.


தீ மிதித்தலுக்காக, 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் தீக்குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் ஊர்வலத்திற்கு பின் குண்டத்தை சுற்றி சூடம் ஏற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


முதலாவதாக பூசாரி தீக்குளி இறங்கினார், அவரைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி வருகின்றனர். சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பக்தியுடன் தீக்குண்டத்தில் இறங்கினர்.


தீ மிதிக்கும்போது, 3 பெண்கள் நெருப்பு குண்டத்தில் தவறி விழுந்தனர். அவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு, 108 வாகனம் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த திருவிழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டைமாநிலமான கர்நாடகாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். வரும் 25-ஆம் தேதி மறுபூஜையுடன் இந்த விழா நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.