பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் நாள்  நடைபெறவுள்ளதால் பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி 7 கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேவேலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். 


பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும்  தேர்வுகளை வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.


வழக்கமாக தமிழகத்தில் அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1-ஆம் நாள் துவங்கி ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 


எனவே தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம் என பள்ளிகல்வி துறை அறிவித்துள்ளது.