சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்: PMK
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணை மீது, போதிய எண்ணிக்கையில் ஒப்பந்தப்புள்ளிகள் வராத நிலையில், அதற்கான அவகாசம் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சேலம் உருக்காலையை வாங்க உலக சந்தையில் போதிய ஆர்வம் காட்டப்படாத நிலையில், மீண்டும், மீண்டும் அதை விற்கத் துடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சேலத்தில் இயங்கி வரும் செயில் எனப்படும் இந்திய இரும்பு எஃகு நிறுவனத்திற்கு சொந்தமான சேலம் இரும்பாலை, துர்காப்பூர் இரும்பாலை, பத்ராவதி இரும்பு மற்றும் எஃகு ஆலை ஆகிய மூன்று ஆலைகளும் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அவற்றை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஜூலை மாதம் 4-ஆம் தேதி உலக அளவில் கோரப்பட்டன. ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. ஆனால், சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் சேலம் இரும்பாலை உள்ளிட்ட 3 இரும்பாலைகளை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்படவில்லை. சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு அதன் தொழிலாளர்கள் முதல் தமிழ்நாட்டு மக்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போதிய எண்ணிக்கையில் ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்படாததை காரணம் காட்டி, அம்முயற்சியை கைவிடுவது தான் சரியானதாக இருக்கும்.
ஆனால், ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்படுவதற்கான காலக்கெடுவை மேலும் 20 நாள்களுக்கு அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி வரை நீட்டித்து செயில் எனப்படும் இந்திய இரும்பு எஃகு நிறுவனம் ஆணையிட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும். இந்த துரோகத்தை அனுமதிக்க முடியாது.
சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்குவதற்காக மத்திய அரசின் சார்பில் முன்வைக்கப்படும் வாதம் அந்த ஆலை கடுமையான நட்டத்தில் இயங்குகிறது என்பது தான். மக்களவையில் இதுகுறித்து பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரு ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த அப்போதைய மத்திய எஃகுத் துறை அமைச்சர்,‘‘நவீன மயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த ஆலையில் செயில் நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு செய்த பிறகும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் இரும்பு ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனால் தான் ஆலையை தனியார்மயமாக்க அரசு தீர்மானித்திருக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார்.
உண்மையில் சேலம் இரும்பாலை நட்டத்தில் இயங்கவில்லை. மாறாக, சேலம் இரும்பாலை மற்றும் அதற்கு சொந்தமான 4000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை மிகக்குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகவே, அந்த ஆலை நட்டத்தில் இயங்க வைக்கப்படுகிறது. சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்யப்படும் இரும்புக்கு உலகச் சந்தையில் அதிக தேவை உள்ளது. அண்மையில் சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தில் கூட சேலம் இரும்பாலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. சேலம் இரும்பாலையில் உற்பத்தியை அதிகரித்து, சிறப்பான முறையில் சந்தைப்படுத்தினால் நிச்சயம் லாபத்தில் இயக்க முடியும்.
அந்த நோக்கத்துடன் தான் சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த ஆலையாக நவீனப்படுத்த வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அதன் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதை செய்யாதது தான் சேலம் ஆலை நஷ்டத்தில் இயங்க காரணமாகும்.
எனவே, சேலம் இரும்பாலையின் அனைத்து சிக்கல்களுக்கும் அதை தனியாரிடம் ஒப்படைப்பது தான் தீர்வு என்று நினைக்காமல், ஆலையின் உற்பத்தித் திறன் மற்றும் சந்தைப்படுத்துதல் திறனை அதிகரித்து, அதன் மூலம் ஆலையை இலாபத்தில் இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கான முதல் பணியாக சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நீட்டிப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ரத்து செய்து, ஆலை பொதுத்துறை நிறுவனமாகவே இயங்கும் என அறிவிக்க வேண்டும்.