உழவர்கள் தற்கொலைக்கு தீர்வு காண மத்திய, மாநில அமைச்சர்கள் அடங்கிய கூட்டு குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:-


இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை அடுத்த ஓராண்டில் செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. உழவர் நலனை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும்.


உழவர்கள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு ஆணை பிறப்பிக்கக்கோரி கிராந்தி என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விஷயத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அளித்த வாக்குறுதியை ஏற்று இந்த ஆணையை பிறப்பித்திருக்கிறது.


உழவர்கள் தற்கொலைக்கு ஒரே இரவில் தீர்வு கண்டுவிட முடியாது என்றும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள கருத்து ஏற்கத்தக்கது தான். அதேநேரத்தில் உண்மையான ஈடுபாட்டுடன் இதற்கான கொள்கைகளை வகுத்து மத்திய, மாநில அரசுகள் செயல்படா விட்டால், இன்னும் ஓராண்டல்ல, பத்தாண்டுகள் ஆனாலும் உழவர்கள் தற்கொலையை தடுக்க முடியாது.


உழவர்கள் தற்கொலையை தடுப்பதற்காக மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டாலும், அதன் மூலமாக மட்டுமே உழவர்களை வாழவைத்து விட முடியாது. பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பது தான் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்த யோசனையாகும்.


இந்தியாவில் மொத்தமுள்ள 12 கோடி உழவர்களில் 5.34 கோடி உழவர்கள், அதாவது 30% வேளாண்மை விளைநிலங்களின் உரிமையாளர்கள் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பயன்களை அனுபவித்து வருவதாகவும், 2018-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப் பட்டுவிடும் என்றும் வேணுகோபால் கூறினார். பிரதமரின் பயிர்க்காப்பீடு என்பது விவசாயிகள் தற்கொலைகளை தடுப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக இருக்குமே தவிர, அதனால் மட்டுமே உழவர்கள் தற்கொலையை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்.


உழவுத்தொழில் லாபம் தராத ஒன்றாக இருப்பதற்கு முக்கியக் காரணம் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது தான். உழவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வகுக்கும் போதெல்லாம் இந்த விஷயத்தை மறந்து விடுவதால் தான் விவசாயிகள் தற்கொலையை இன்றுவரை நம்மால் தடுக்க முடியவில்லை.


வேளாண் விளைபொருட்களுக்கு கொள்முதல் விலையை நிர்ணயிப்பது குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, தேசிய வேளாண்மை பொருளாதாரம் மற்றும் கொள்கை நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் சந்த் குழு ஆகியவை முறையே மன்மோகன்சிங் அரசு, நரேந்திரமோடி அரசு ஆகியவற்றிடம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. இரண்டுமே விளைபொருட்களின் உற்பத்திச் செலவுடன் குறைந்தபட்சம் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்துகின்றன. ஆனால், இந்த 2 அறிக்கைகளையும் அரசு செயல்படுத்தவில்லை.


அதுமட்டுமின்றி, இந்தியாவில் பல மாநிலங்களில் மானாவாரி சாகுபடி தான் அதிக பரப்பளவில் நடைபெறுகிறது. விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் பாசன வசதி சொல்லிக் கொள்ளும்படி விரிவுபடுத்தப்படவில்லை. ஆந்திரம், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சிறப்புத் திட்டங்களின் மூலம் பாசனப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டாலும் தமிழகத்தின் பாசனக் கட்டமைப்பு கவலையளிக்கும் வகையில் தான் உள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்யாமல் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்துவது ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்கு இணையான பயனையே கொடுக்கும்.


எனவே, உழவர்கள் தற்கொலையை தடுக்க வேளாண்மை சார்ந்த அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தும் வகையில் முழுமையான திட்டத்தைத் தயாரித்து செயல்படுத்த வேண்டும். இதற்கு வசதியாக மத்தியிலும், மாநிலத்திலும் வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதுடன், மத்திய, மாநில அமைச்சர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவையும் அரசு அமைக்க வேண்டும்.


இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.